போர் சூழலில் இந்திய விமானம் மட்டும் தைரியமாக உக்ரைனுக்கு சென்றதா ?

பரவிய செய்தி

உலகின் அனைத்து நாடுகளும் உக்ரைன் வழியாக செல்லாமல் நிறுத்தி வைத்திருக்கும் போது.. நம் இந்திய விமானம் மட்டும் இந்தியர்களை மீட்க உக்ரைனுக்கு செல்லும் படம்.

மதிப்பீடு

விளக்கம்

போர் சூழலால் உக்ரைன் மீது விமானங்கள் பறக்காமல் சுற்றிச் செல்கையில் இந்தியாவின் விமானம் மட்டுமே உக்ரைன் நாட்டிற்கு சென்றதாக விமானங்கள் பயணிக்கும் கிராபிக்ஸ் வரைபடம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archivelink 

பிப்ரவரி 24-ம் தேதி இந்தியாவில் இருந்து பயணித்த ஏர்இந்தியா AI121 விமானம் உக்ரைன் மீது பறந்ததாக republic world உள்ளிட்ட சில செய்திகளிலும் வைரல் செய்யப்படும் கிராபிக்ஸ் வரைபடம் இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ? 

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க ஏர்இந்தியா 1947 விமானம் பிப்ரவரி 24-ம் தேதி காலை டெல்லியில் இருந்து உக்ரைன் அனுப்பப்பட்டது. ஆனால், போர் சூழல் காரணமாக விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் அந்த விமானம் பாதியில் திரும்பி வந்தது.

தற்போது வைரல் செய்யப்படும்  கிராபிக்ஸ் வரைபடத்தில் உள்ள ஏர்இந்தியா விமானம் AI121 டெல்லியில் இருந்து ஜெர்மனியின் பிரான்க்புர்ட் நகருக்கு சென்றதாக இடம்பெற்று இருக்கிறது.

பிப்ரவரி 24-ம் தேதி டெல்லியில் இருந்து ஜெர்மனியின் பிரான்க்புர்ட் நகருக்கு சென்ற ஏர்இந்தியா விமானம் AI121 பயணித்த பாதை குறித்து planefinder இணையதளத்தில் தேடுகையில், அன்றைய நாளில் பயணித்த அனைத்து விமானங்களும் உக்ரைன் மீது செல்லாமல் சுற்றி செல்வதை பார்க்கலாம்.

Twitterlink

வைரல் செய்யப்படும் கிராபிக்ஸ் வரைபடத்தை வெளியிட்ட QuebecTango ட்விட்டர் பக்கத்தில், பின்னர் இது செயலியில் ஏற்பட்ட பிழை, இது போலியானது என தெரியவந்துள்ளது ” என்று பிப்ரவரி 25-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட முதல் பிரிவு எல்லை வழியாக ரோமானியாவிற்கு வர வைத்து அங்கிருந்து மீட்கப்பட்டதாக பிப்ரவரி 25-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்..

Twitter link 

உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலால் இந்திய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கான பேர் சிக்கி உள்ளனர். உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க  அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. எனினும், பயணம் மேற்கொள்வதில் மாணவர்கள் சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். உக்ரைனில் படிக்கும் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த செய்தி தற்போது வெளியாகியது.

முடிவு : 

நம் தேடலில், உலகின் அனைத்து நாடுகளும் உக்ரைன் வழியாக செல்லாமல் நிறுத்தி வைத்திருக்கும் போது நம் இந்திய விமானம் மட்டும் இந்தியர்களை மீட்க உக்ரைன் நாட்டிற்கு  சென்றதாக பரவும் தகவல் தவறானது.

அந்த கிராபிக்ஸ் வரைபடத்தில் பயணிக்கும் விமானம் டெல்லியில் இருந்து ஜெர்மனி நோக்கி சுற்றி சென்றுள்ளது. உக்ரைன் போர் சூழலால் அந்த நாட்டிற்கு நேரடியாக விமானம் செல்லவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button