ரஷ்ய ராணுவ வீரரை உக்ரைன் சிறுமி விரட்டுவதாக தவறாக பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் ராணுவப் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகையில், அந்நாட்டைச் சேர்ந்த சிறுமி ரஷ்ய ராணுவ வீரருக்கு எதிராக குரல் எழுப்பி விரட்டுவதாக சமூக வலைதளங்களில் இவ்வீடியோ பரவி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், பாலஸ்தீன பெண் குழந்தை அஹெத் தமிமி என் சகோதரன் எங்கே எனக் கேட்டு இஸ்ரேலிய ராணுவ வீரரை பார்த்து கேள்வி எழுப்புவதாக இவ்வீடியோ 2012-ல் யூடியூப் சேனல் ஒன்றில் பதிவாகி இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில், 2018-ல் பிபிசியில் அஹெத் தமிமி தொடர்பாக பிரத்யேக கட்டுரையே வெளியாகி இருக்கிறது தன்னுடைய 11 வயதில் அஹெத் தமிமி இஸ்ரேலிய ராணுவ வீரரை தாக்க கை ஓங்கியதாக இதே காட்சி புகைப்படமாக இடம்பெற்று இருக்கிறது.
2018-ல் இஸ்ரேலிய ராணுவ வீரரை அறைந்ததைப் படம் பிடித்த பாலஸ்தீன இளம்பெண் 17 வயதான அஹெத் தமிமி மீது பாதுகாப்புப் படையினரைத் தாக்கியது மற்றும் வன்முறையத் தூண்டியது உட்பட 12 குற்றங்கள் சுமத்தப்பட்டது. அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களும் நிகழ்ந்து இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், உக்ரையின் சிறுமி ரஷ்ய இராணுவ வீரரை விரட்டும் காட்சி எனப் பரவும் வீடியோ உக்ரைனைச் சேர்ந்தது அல்ல , 2012-ல் பாலஸ்தீன சிறுமி இஸ்ரேலிய ராணுவ வீரரைப் பார்த்து கேள்வி எழுப்பிய வீடியோ என அறிய முடிகிறது.