உக்ரைன் துறைமுகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் எனப் பரவும் லெபனான் விபத்தின் வீடியோக்கள் !

பரவிய செய்தி
உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் இருந்த இரண்டு பிரிட்டிஷ் சரக்கு கப்பல்களை நான்கு ரஷ்ய ஏவுகணைகள் தாக்கின. இந்த பிரிட்டிஷ் கப்பல்கள் அதிக வெடிப்பொருட்களை உக்ரைனுக்கு ஏற்றிச் சென்றன.
மதிப்பீடு
விளக்கம்
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலால் பிரிட்டிஷ் சரக்குகள் கப்பல்கள் வெடித்து பெரும் விபத்து நிகழ்ந்ததாக இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை விசிகவைச் சேர்ந்த மருத்துவர் ஷர்மிளா ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
The port of #Odessa, #Ukraine , was hit by four #Russian missiles that hit two #British cargo ships triggering a massive explosion. British ships were carrying high explosives to Ukraine!😣😣 pic.twitter.com/4hErN8he6X
— Dr M K SHARMILA (@DrSharmila15) August 18, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் 1.55 நிமிட வீடியோவில் வெடித்து சிதறும் காட்சிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளன. முதலில் பெரிய கட்டிடம் அருகே வெடித்து சிதறுவதை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியை கிஃப்ரேமாக மாற்றி ரிவர்ஸ் இமேஸ் சேர்ச் செய்கையில், 2020 ஆகஸ்ட் 9ம் தேதி அல் அரேபியா ஆங்கில யூடியூப் பக்கத்தில், “லெபனான் நாட்டின் பெய்ரூட்-ல் நடந்த வெடி விபத்தின் காட்சி ” என இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா சமயத்தில், லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டு இருந்த கிடங்கு வெடித்து சிதறியதால் 218 பேர் உயிரிழந்தனர், 6,500 பேர் படுகாயமடைந்தனர், 3 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.
Big explosion 💥 in #beirut #lebanon view from @dogpalacelebanon @maverickscafebar #beirut_port_explosion we are all fine 🙌🙏also our dogs are ok! #بيروت #لبنان #مرفق_بيروت #jackissak9 #dogpalacelebanon #drclauderslebanon #PrayForLebanon pic.twitter.com/4HpSSGmAuo
— Jack G. Issa (@Yaacoubissa) August 5, 2020
வைரல் வீடியோவில் இரண்டாவதாக இடம்பெற்ற ‘Maverick’s cafe bar’ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவும் பெய்ரூட் விபத்தின் போது எடுக்கப்பட்டது. இந்த வீடியோ 2020 ஆகஸ்ட் 5ம் தேதி Jack G.Issa எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
இதற்கடுத்து, சாலையில் மற்றும் கடலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் பெய்ரூட் விபத்துடன் தொடர்புடையது. பெய்ரூட் விபத்தில் பல்வேறு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. வீடியோவின் மற்ற பகுதிகளிலும் துறைமுகத்தில் வெடி விபத்து நிகழ்ந்த காட்சியே மீண்டும் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : துருக்கி, சிரியா நிலநடுக்கத்திற்கு அணு உலை வெடிப்பு காரணம் எனப் பரவும் வதந்தி !
இதற்கு முன்பாக, துருக்கி, சிரியா நிலநடுக்கத்திற்கு அணு உலை வெடிப்பு காரணம் எனப் பரவிய வதந்தியில் பெய்ரூட் வெடி விபத்து வீடியோக்களே இணைக்கப்பட்டு இருந்தன. அந்த காட்சிகளும் தற்போது பரவும் வீடியோவில் இடம்பெற்று உள்ளன.
முடிவு :
நம் தேடலில், உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் இருந்த இரண்டு பிரிட்டிஷ் சரக்கு கப்பல்களை நான்கு ரஷ்ய ஏவுகணைகள் தாக்கிய காட்சி எனப் பரவும் வீடியோ தவறானது. இந்த வீடியோக்கள் 2020 லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த அமோனியம் நைட்ரேட் கிடங்கு வெடித்து சிதறிய போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்பதை அறிய முடிகிறது.