உக்ரைன் மாணவி தன்னை வீட்டில் இறக்கி விடவில்லை என அரசைக் குறைக்கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி
இந்திய தூதரகம் என்னை மும்பை விமான நிலையத்தில் இறக்கி விட்டது, அங்கு எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. அங்கு 3௦ நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தேன், ஆனால் இந்திய தூதரகத்தில் இருந்து யாரும் வரவில்லை . நான் இந்திய தூதரகத்திற்கு போன் செய்தேன் யாரும் எடுக்கவில்லை. அதன் பின் கார் புக் செய்து வீட்டிற்கு சென்றேன். அதற்கு 234ரூ செலவாகியது – மாணவி
மதிப்பீடு
விளக்கம்
உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்கும் பணி தாமதமாக இருப்பதாக இந்திய அரசின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவி மும்பைக்கு வந்த பிறகு அரசு தன்னை வீட்டில் கொண்டு போய் விடவில்லை என இந்திய தூதரகத்தை குறைச் சொல்வதாக மீம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் மீம் பதிவில் உள்ள மாணவியின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” உக்ரைன் நாட்டில் 3-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவி ஞானஸ்ரீ சிங் 3 நாட்களாக ஓர் இடத்தில் பதுங்கி இருப்பதாகவும், அங்கிருந்து உதவி வேண்டி பேசிய வீடியோ பிப்ரவரி 28-ம் தேதி நியூஸ் 1 கன்னடா உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
உக்ரைனில் படிக்கும் ஞானஸ்ரீ சிங் கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்தவர். அவர் எப்படி மும்பை விமான நிலையத்தில் இருந்து 234ரூபாயில் வீட்டிற்கு காரில் சென்று இருக்க முடியும். அவர் இந்தியா திரும்பியதாகவோ அல்லது இப்படியொரு கருத்தை தெரிவித்ததாகவோ எந்த தகவலும் இல்லை.
உக்ரைனில் இருந்து ஞானஸ்ரீ சிங் உதவி கேட்டு பேசிய வீடியோ வெளியான செய்திகளில் இருந்து அவரின் புகைப்படத்தை எடுத்து போலியான கருத்துடன் மீம் ஒன்றை உருவாக்கி உக்ரைனில் இருந்து வரும் மாணவர்களை தவறாக சித்தரிக்க முயன்றுள்ளனர்.
முடிவு :
நம் தேடலில் , இந்திய தூதரகம் என்னை மும்பை விமான நிலையத்தில் இறக்கி விட்டது, அங்கு எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. அதன் பின் 234ரூபாய் செலவு செய்து கார் புக் செய்து வீட்டிற்கு சென்றேன என மாணவி கூறியதாகப் பரவும் தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.