This article is from Sep 15, 2021

மு.க.ஸ்டாலினுக்கு ஐ.நாவில் பாராட்டா ? யூடியூப் வீடியோவை செய்தியாக வெளியிட்ட முரசொலி, கலைஞர் செய்தி, விடுதலை நாளிதழ் !

பரவிய செய்தி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்தால் மிரண்டு போன உலக நாடுகள் : ஐ.நா சபையில் பாராட்டு !

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

” ஐ.நா சபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு ” எனும் தலைப்பில் கலைஞர் செய்திகள் ட்விட்டரில் வெளியான செய்தி ஒன்றை பார்க்க நேரிட்டது. செய்தியில், ” மிரண்டுபோன உலக நாடுகள் !” எனும்  தலைப்பில், ” போஸ்ட் பாக்ஸ்” எனும் “யூடியூப் சேனல் காணொலி ஒன்றில் வெளியானதை எழுத்து வடிவில் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள் குறித்து வரிசையாக கூறியுள்ளனர்.

இறுதியாக, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளும், இனிமேல் அவர்கள் நாட்டில் அரசு சம்பந்தப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்களில் முன்னாள் தலைவர்களின் படம் இடம்பெறாது என்று முடிவெடுத்துள்ளதாகவும், அதற்குக் காரணம், மு.க.ஸ்டாலினின் இந்தச் செயலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்புதான் என்றும் அந்நாட்டு ஊடகங்களில் பேசுபொருளாக ஆகிவிட்டது.

தற்போது அதற்கு ஒருபடி மேலே சென்று உலக நாடுகளின் அதிபர்கள் ஒன்றாகக்கூடும் ஐ.நா.சபையே – மு.க.ஸ்டாலினின் இந்தச் செயலைப் பாராட்டிப் பேச வேண்டும் என்றும், இதனால் மற்ற நாடுகளும் இந்த சுயநலமில்லாத அரசியலைப் பின்தொடரலாம் என்றும் ஐ.நா.சபையில் வலியுறுத்தவுள்ளதாக ஐ.நா.சபையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஊடகங்கள் வாயிலாகப் பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ” எனக் அக்காணொலியில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.

Murasoli News 

Viduthalai news link 

கலைஞர் செய்தி இணையதளத்தில் இந்த செய்தியை முரசொலி நாளிதழ் வெளியிட்டதாக குறிப்பிட்டு உள்ளனர். இதேபோல், விடுதலை நாளிதழின் முகநூல் பக்கத்தில் இதே செய்தியை பதிவிட்டு இருக்கிறார்கள்.

உண்மை என்ன ?

முரசொலி, கலைஞர் செய்திகளில் குறிப்பிட்டுள்ளபடி “போஸ்ட் பாக்ஸ் ” எனும் யூடியூப் சேனலில் வெளியான வீடியோ குறித்து தேடுகையில், செப்டம்பர் 12-ம் தேதி “ஐ.நா.சபையில் ஸ்டாலினுக்கு பாராட்டு! செய்தியைக் கேட்டு வாய்யை பிளர்ந்த மோடி ” எனும் தலைப்பில் வெளியான வீடியோ நமக்கு கிடைத்தது.

புகைப்படங்களை வைத்து பின்னணியில் ஒருவர் பேசும் 2 நிமிட வீடியோ 35 ஆயிரம் பார்வைகளை மட்டுமே கடந்து உள்ளது. இந்த வீடியோவில் பேசியதை அப்படியே செய்தியாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஆனால், இந்த வீடியோவில் அமெரிக்க, சுவிட்சர்லாந்து நாடுகள் மு.க.ஸ்டாலினை பின்பற்றுவதாக, அது அந்நாட்டு ஊடகங்களில் பேசுப் பொருளானது, ஐ.நாவில் பாராட்டு எனக் கூறுவதற்கு எல்லாம் எந்த ஆதாரத்தையும் இணைக்கவில்லை. போகிற போக்கில் கூறப்பட்டுள்ளது. யார் அந்த ஐ.நாவின் முக்கிய நிர்வாகி எனத் தெரியவில்லை.

வீடியோவில் கூறப்பட்டது போல் நடந்து இருந்தால் முன்னணி செய்தி ஊடகங்களே பெரிதாய் வெளியிட்டு இருப்பார்கள். அது தொடர்பாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. ஏன், முரசொலி, கலைஞர் செய்தி கூட யூடியூப் வீடியோவை ஆதாரமாக வைத்தா செய்தி வெளியிட்டு இருக்கும்.

வீடியோவில் ஊடகங்களில் பேசப்படுவதாக இடம்பெற்று இருக்கும் செய்திவாசிப்பாளரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது 2018-ல் வெளியான பிபிசி செய்திவாசிப்பாளரின் புகைப்படம் என அறிய முடிந்தது.

2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ” போஸ்ட் பாக்ஸ் ” யூடியூப் சேனலில், பாஜக, அதிமுகவிற்கு எதிரான மற்றும் கிண்டல் வீடியோக்களும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவான வீடியோக்களுமே அதிகம் இருக்கிறது.

 

முரசொலி, விடுதலை, கலைஞர் செய்திகள் போன்ற அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் பார்வையாளர்களை கவர வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலில் வெளியான ஆதாரமில்லாத வீடியோவை மையமாக வைத்து செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், முரசொலி, விடுதலை, கலைஞர் செய்தியில் வெளியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்தால் மிரண்டு போன உலக நாடுகள் : ஐ.நா சபையில் பாராட்டு எனும் செய்தி தவறானது. போஸ்ட் பாக்ஸ் எனும் யூடியூப் சேனலில் வெளியான ஆதாரமில்லாத வீடியோவை மையமாக வைத்து தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader