This article is from Mar 17, 2019

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு மறுத்தாரா ?

பரவிய செய்தி

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதை விரும்பாமல் சீனா இடம் பெற வழிவகுத்தார் நேரு.

மதிப்பீடு

சுருக்கம்

இதற்கான பதிலை பிரதமர் நேருவின் 1955 -ல் லோக்சபாவில் தெரிவித்து இருந்ததாக ” தி ஹிந்து ” நாளிதழில் வெளியாகி உள்ளது. அதில், எந்தவொரு வாய்ப்பும் இந்தியாவிற்கு வரவில்லை எனக் கூறியதாக இடம்பெற்று உள்ளது.

எனினும், இதற்கு முன்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடம் தேவை, ஆனால் அது சீனாவிற்கு பதிலாக இல்லை என நேரு பேசி உள்ளார். கட்டுரையை முழுமையாக படிக்கவும்.

விளக்கம்

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக JEM அமைப்பின் தலைவர் மசூத் ஆசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐக்கிய நாடுகளின் சபையில் கொண்டு வந்த தீர்மானம் பெய்ஜிங்கிற்கு பிறகு சீனத் தலைவர் ஜி ஜின்பிங் ஆல் தடுக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி பிரதமர் மோடியை ” பலவீனமாக “மற்றும் ” பயம் ” கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு “உண்மையான பாவி ” ஆவார், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக  இந்தியாவிற்கு பதில் சீனாவிற்கு ஆதரவாக இருந்தார் ” என கடுமையாக குற்றம்சாற்றினார்.

1945-ல்  ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. தொடங்கியது முதலே  உறுப்பினராக இருந்தது சீனா. நிரந்தர உறுப்பினர் பதவி பற்றிய நேரு காலத்து செய்தி பற்றி விரிவாக காண்போம்.

1950-ல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கான இடம் தேவை என்றே நேரு பேசியுள்ளார்.  இதை அமெரிக்காவின் இந்திய தூதராக இருந்த தன் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.

” 1950-ல் அமெரிக்காவின் இந்திய தூதராக இருந்த விஜயலட்சுமி பண்டித் அவர்களுக்கு நேரு எழுதிய கடிதத்தில்,   இந்தியாவிற்கு பல காரணங்களுக்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமான இடம் தேவைப்படுகிறது. ஆனால், அது சீனாவிற்கு பதிலாக தேவையில்லை.  ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

1950-களின் நடுப்பகுதியில் கொரியாவின் நெருக்கடியால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு தொடர்ந்து கீழ்நோக்கி சரிந்து இருந்தது.

1955-ல் நேரு மற்றும் சோவியத் யூனியன் அதிபர் நிக்கோலாய் பல்கனி இடையே நடைபெற்ற சந்திப்பில் நிரந்தர இடம் குறித்த பேச்சு இருந்துள்ளது.

நிக்கோலாய் பல்கனின் : 

நான்கு சக்திவாய்ந்த மாநாட்டைப் பற்றிய உங்களின் பரிந்துரைக்கு நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம். நாங்கள் சர்வதேச சூழ்நிலையை விவாதிக்கும் போது, பதற்றத்தைக் குறைப்பதற்காக பின்னாளில் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை ஆறாவது அங்கத்தினராக சேர்க்கலாம் என பரிந்துரைக்கிறோம்.

நேரு : 

அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவிற்கு பதிலாக இந்தியா இடம் பெற விருப்பம் தெரிவித்தனர் என்பதை நிக்கோலாய்க்கு தெரியும். ஆனால், இது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சிக்கலை உருவாக்கும். சில நிலைபாடுகளை ஆக்கிரமிக்க நம்மை முன்னோக்கி நகர்த்த முயற்சிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில், அவை சிரமங்களை உண்டாக்கும். அது இந்தியாவை ஒரு சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றால் அது ஐ.நா சார்டர் மீது கேள்வி எழுப்பும். சீனாவின் சேர்க்கையும், மற்ற சாத்தியக்கூறுகளும் தீர்க்கப்படாத வரை இதைக் கண்டிப்பாக செய்யவே முடியாது என நாங்கள் நினைக்கிறோம். நாம் முதலில் சீனாவின் சேர்க்கையில் தான் கவனம் செலுத்த வேண்டும். இது சரியான நேரமில்லை என தெரிகிறது.

நேரு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கான உறுப்பினர் இடத்தை பெற விரும்பாமல் மறுத்து விட்டார் என 1955-ல் மீண்டும் கேள்விகள் எழுந்தன. அதற்கு நேரு அளித்த பதிலும் ” தி ஹிந்து “-வில் வெளியாகி உள்ளது.

1955-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி லோக்சபாவில் ஜே.என்.ப்ரேக், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவிக்கபடாத உறுப்பினர் இடத்தை இந்தியா மறுத்து உள்ளதா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்காக, நேரு கூறியவை.

” இந்த வகை விசயத்தில் முறையாக அல்லது முறைசாராக எந்தவொரு வாய்ப்பும் வரவில்லை. சில பத்திரிகையில் தெளிவற்ற குறிப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில், அவை அடிப்படையை கொண்டிருக்கவில்லை. பாதுகாப்பு சபை அமைப்பு ஐ.நா சார்ட்டர் மூலம் வரையறுக்கப்படுகிறது, அதன்படி குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே நிரந்தர இடத்தைப் பெறுகின்றன. சார்ட்டரில் திருத்தங்கள் கொண்டு வராமல் எந்த சேர்க்கையோ அல்லது  மாற்றமோ செய்ய முடியாது. எனவே,  இந்தியாவிற்கு இடம் அளித்து, அதை இந்தியா மறுத்ததற்கான கேள்வியே இல்லை. எங்களின்பிரகடனமானக் கொள்கை, அனைத்து நாடுகளும் ஐ.நா உறுப்பினர் பதவிக்கு தகுதிப்பெற்றதாக அனுமதிக்க ஆதரவு அளிப்பதாகும்  “.

பிரதமர் நேருவின் நேரடி பதில் 1955 -ல் தி ஹிந்து நாளிதழில் வெளியாகி இருக்கிறது.

1955-ல் நேருவின் இருவேறு கருத்துக்களே பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது தொடர்பான சர்ச்சைப் பேச்சுக்களுக்கு காரணமாயிற்று.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader