யுனெஸ்கோ உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததாக வதந்தி!

பரவிய செய்தி
ஐநாவின் பாரம்பரிய மற்றும் தொல்பொருள் துறை அமைப்பான யுனெஸ்கோ நடத்திய ஆய்வில், உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நம் நாடார் இனம் தேர்வு. நாடார் குலம் முதல் இடம் பிடித்தது. உலகில் உள்ள 3 லட்சத்துக்கும் மேலான ஜாதி, இன குழுக்களை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். முதல் 10 இடங்களில் இந்தியாவிலுள்ள வேறெந்த ஜாதியும் இடம்பெறவில்லை. நம்பிக்கை, நாணயம், உழைப்பு, பிறருக்கு உதவுதல், தொன்மை, கலாச்சாரம் , பண்பாடு, பாரம்பரியம், பாசம், வீரம் முதலியவற்றில் உலகுக்கே முன்னோடி என புகழாரம்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் உள்ள நாடார் சமூகத்தை உலகில் உள்ள தொன்மையான இனமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளதாக போலியான சான்றிதழ் உடன் ஓர் மீம் பதிவு சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
யுனெஸ்கோ அமைப்பு ஓர் சாதி அமைப்பிற்கு சான்றிதழ் அளித்து உள்ளதாக பரப்பப்படும் சான்றிதழை காணும் போது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட வதந்தி செய்தி என எளிதாக அறிந்து கொள்ளலாம், இதற்கெல்லாம் கட்டுரை அவசியமா என பலரும் கமெண்ட் செய்யத் துவங்கி விடுவார்கள். ஆனால், இந்த மீம் பதிவை பலரும் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. அவ்வாறான மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதற்கு முன்பாகவும் கூட, உலகின் சிறந்த தேசிய கீதமாக இந்திய தேசிய கீதம் தேர்வு, உலகின் சிறந்த உணவாக தென்னிந்திய உணவான இட்லியை யுனெஸ்கோ அறிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகள் குறித்து யூடர்ன் பதிவிட்டு இருந்தோம். அதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட சாதியை சிறந்த இனமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளதாக வதந்தியை பரப்பி உள்ளனர். யுனெஸ்கோ அந்த மாதிரியான எந்தவொரு அறிவிப்புகளையும் வெளியிடுவதில்லை.
மேற்காணும் மீம் பதிவில் இடம்பெற்றுள்ள சான்றிதழில் யுனெஸ்கோவின் லோகோ மட்டுமின்றி UNHCR என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. UNHCR ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பாகும். அந்த சான்றிதழிலும் 2017-ம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2017-ம் ஆண்டில் UNHCR வழங்கிய சான்றிதழ் எனத் தேடுகையில், கஜகஸ்தான் நாட்டில் உள்ள டூரன் பல்கலைக்கழகத்துடன் யுனெஸ்கோ, யுஎன்எச்சிஆர் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கிய சான்றிதழ் எனத் தெரிகிறது.
மேற்காணும் முகநூல் பதிவில் ஒருவருக்கு வழங்கிய சான்றிதழ் இடம்பெற்று இருக்கிறது. மற்றொரு மாணவருக்கு வழங்கிய சான்றிதழின் புகைப்படம் கஜகஸ்தான் யுனெஸ்கோ கிளையின் இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
2017-ம் ஆண்டில் கஜகஸ்தான் நாட்டில் நிகழ்ந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் ஃபோட்டோஷாப் மூலம் நாடார்-இந்தியா எனக் குறிப்பிட்டு வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.