ஆன்லைன் ரம்மிக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததாகப் பொய் பரப்பிய இந்து மக்கள் கட்சி !

பரவிய செய்தி
ஆன்லைன் ரம்மி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் மாஸ்டர்ஸ்ட்ரோக்.
மதிப்பீடு
விளக்கம்
ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இத்தகைய ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது.
ஆனால், ஆன்லைன் ரம்மி விவகாரம் ஒன்றிய அரசின்கீழ் வருகிறது. எனவே அதில் தன்னிச்சையாக சட்டமியற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவில் கையொப்பமிடாமல் திருப்பி அனுப்பினார்.
இதுகுறித்து தி.மு.க எம்.பி பார்த்திபன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ஆன்லைன் சூதாட்டங்களைத் தங்களின் வரம்புக்குள் கொண்டுவருவதற்கும், அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு எனக் கூறியிருந்தார்.
Online Rummy etc with betting banned by centre//So DMK can claim it is dueto their and EVR efforts:))))) RT
— RVAIDYA2000 🕉️ (@rvaidya2000) April 7, 2023
இந்நிலையில் ஒன்றிய அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்துள்ளதாகவும், இது பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் இந்து மக்கள் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கு திமுகவின் முயற்சி எனக் கூறப்படலாம் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
ஒன்றிய அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்ததாக இந்து மக்கள் கட்சியின் பதிவு குறித்து இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்திகளும் வெளியாகவில்லை. மேற்கொண்டு தேடியதில் சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்டம் தொடர்பான செயலியையும், 94 கடன் வழங்கும் செயலியையும் ஒன்றிய அரசு தடை செய்ய உள்ளதாகக் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ANI இணைய தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி சட்டவிரோதமானது எனத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட செயலிகளில் சிலவற்றிற்கான தடைகளை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவது குறித்த செய்தி 2023, பிப்ரவரி 10ம் தேதி ‘மிண்ட்’ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், சில இணையதளங்கள் மற்றும் செயலிகள் முறையாகச் செயல்படுவது குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தது. அதனை ஆய்வு செய்த பின்னர் அவற்றிற்கான தடைகளை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதில், LazyPay மற்றும் Kishsht போன்ற டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளும் அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு ஜூன் மாதம் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் குறித்து அச்சு, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களுக்கு சில முக்கிய விதிமுறைகளை விதித்தது.
அதில், 18 வயதுக்கு உட்பட்டவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக விளம்பரங்களில் காண்பிக்கக் கூடாது. அச்சு விளம்பரங்களில் இதிலுள்ள நிதி ஆபத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அதேபோல் ஒலி மற்றும் ஒளி விளம்பரங்களில் சாதாரணமாகப் பேசும் வேகத்தில் விளம்பரம் உள்ள அதே மொழியில் எச்சரிக்கை இருக்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததாக எந்த அறிவிப்பும் அரசு தரப்பிலிருந்து வெளியாகவில்லை.
முடிவு :
நம் தேடலில், ஆன்லைன் ரம்மிக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததாக இந்து மக்கள் கட்சி கூறிய தகவல் பொய்யானது என்பதை அறிய முடிகிறது.