ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடு குறித்து தவறான தகவல் வெளியிட்ட நியூஸ் 18 தமிழ்நாடு !

பரவிய செய்தி

செலவே இல்லாமல் 5 லட்சம் இன்சூரன்ஸ்  பெரும் வழி… Ayushman Bharath Health Account 

Youtube link 

மதிப்பீடு

விளக்கம்

‘Ayushman Bharath Health Account’ பற்றி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த சுகாதார கணக்கு மூலமாக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை Health benefit பெற முடியும் எனக் கூறி, அதில் பதிவு செய்வதற்கான வழி முறைகள் கூறப்படுகிறது. 

பதிவு செய்த பிறகு வரக்கூடிய கார்டினை (எண்) பயன்படுத்தி இந்தியா முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், 600-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையும் குறிப்பிட்ட ஆய்வகங்களில் மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ளலாம். இது ஒன்றிய அரசின் சார்பாக  இலவசமாக வழங்கப்படுகிறது என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 

ஒன்றிய அரசு 2018 செப்டம்பர் 23ம் தேதி ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தது. கிராமப்புறங்களைப் பொறுத்தவரை சொந்த வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், துப்புரவு மற்றும் தூய்மை பணி செய்பவர்கள் போன்றோர் பயன் பெறத் தகுதி பெற்றவர்களாவர். 

அதேபோல் நகர்ப்புறங்களைப் பொறுத்த அளவிலும் யார் யார் தகுதியுடையவர் என்ற நீண்ட பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

ஆனால், நியூஸ் 18 தமிழ்நாடு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தைப் பற்றிக் கூறவில்லை. மாறாக ‘Ayushman Bharath Health Account’ (ABHA) பற்றித்தான் கூறியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி 2020ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம்’ குறித்துப் பேசுகையில், ‘ஒருவரது உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் அட்டையில் சேமித்து வைக்கப்படும். மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்கும் நோயாளி, இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டிஜிட்டல் அட்டை அல்லது எண் மூலம் நோயாளியின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களையும் மருத்துவர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்’ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது நியூஸ் 18 வீடியோவில் சொல்லப்பட்டிருப்பது போன்ற தகவல் சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ் ஆப்-பில் பரவியது. அத்தகவல் போலியானது என PIB Fact Check (Press Information Bureau) அவர்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அப்பதிவில் ABHA (Ayushman Bharath Health Account) என்பது சுகாதாரம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை உருவாக்குவதாகும். 

ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) என்பது ஆயுஷ்மான் அட்டைகள் மூலம் தகுதியான குடும்பங்களுக்குச் சுகாதார காப்பீடு வழங்கும் திட்டமாகும். இரண்டும் வெவ்வேறானவை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : PMJAY மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் அம்சங்கள்.. சிஏஜி அறிக்கையும், ஒன்றிய அரசின் பதிலும் – விரிவான தொகுப்பு !

இவற்றில் இருந்து Ayushman Bharath Health Account மூலம் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் என நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட வீடியோவில் உள்ள தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், Ayushman Bharath Health Account-ல் பதிவு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம் என நியூஸ் 18  தமிழ்நாடு கூறிய தகவல் தவறானது. ABHA எந்தவித மருத்துவ காப்பீட்டையும் வழங்கவில்லை. அது  சுகாதாரம் தொடர்பான டிஜிட்டல் ஆவணம் மட்டுமே என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader