ஒன்றிய அரசு 600 கோடி கொடுத்தும் செங்கல்பட்டு மையத்தில் மாநில அரசு பணிகளை துவங்கவில்லை என விஜயபாஸ்கர் கூறினாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தின் செங்கல்பட்டில் அமைத்துள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு ஒன்றிய அரசு 600 கோடி நிதி முதலீடு செய்தும் இதுவரை எந்த பணியையும் மாநில அரசு துவங்கவில்லை என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாக மீடியான் முகநூல் பக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் பதிவு வெளியிடப்பட்டது.
உண்மை என்ன ?
இப்பதிவில் இடம்பெற்றுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகைப்படம் மற்றும் ட்வீட் குறித்து தேடுகையில், ” ஜூன் 2-ம் தேதி அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் கிடைத்தது.
Hon’ble @drharshvardhan Sir, the IVC by HLL at Chengalpet we visited on 8th Jan has not commenced operations despite 600 Cr investment by the Union Govt. It’s the collective wish of TN to begin the functioning of IVC asap to bridge the demand-supply gap of #CovidVaccine(file pic) pic.twitter.com/qqiwTFj1Wy
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) June 2, 2021
இந்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை டேக் செய்த ட்வீட் பதிவில், ” செங்கல்பட்டில் யூனியன் அரசின் ரூ.600 கோடி முதலீட்டில் இருந்தபோதிலும் செயல்பாடுகள் தொடங்கப்படாத எச்.எல்.எல்-ன் இவிசி மையத்தை பார்வையிட கடந்த ஜனவரி 8-ம் தங்களுடன் இணைத்து வந்திருந்தேன். கோவிட் தடுப்பூசியின் தேவைக்கும்-விநியோகத்துக்கும் இடையே உள்ள இடைவெளிக்கான பாலமாக இருப்பதற்கு ஐ.வி.சி உடனடி செயல்பாட்டை தொடங்குவதே ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் விருப்பம் ” எனக் கூறி இருக்கிறார்.
அவரது ட்வீட் பதிவில், ஒன்றிய அரசு 600 கோடி நிதி கொடுத்தும் தமிழ்நாடு அரசு பணியை துவங்கவில்லை என கூறவில்லை. மாறாக, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என ஹர்ஷ் வர்தனுக்கு கோரிக்கை வைத்துள்ளார். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு மையம் ரூ.600 கோடியில் உருவாக்கப்பட்டது. அதையே அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
உண்மையில், தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை மாநில அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றையும் பிரதமர் மோடிக்கு எழுதி இருந்தார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு மெளனம் காத்து வருகிறது.
2012-ம் ஆண்டு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, 100 சதவீத மானியத்துடன் செங்கல்பட்டில் எச்.எல்.எல் பயோடேக் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் அமைவதற்கான பணிகள் தொடங்கியது. ஒன்றிய அரசின் சார்பில் ரூ.600 கோடி நிதியில் உருவாக்கப்பட்ட வளாகத்தின் கட்டுமான பணிகள் மற்றும் இயந்திரங்கள் நிறுவுதல் என அனைத்து பணிகளும் 2017-ல் முடிவடைந்தன. ஆனால், தற்போதுவரை ஒரு தடுப்பூசிக் கூட தயாரிக்கப்படவில்லை.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், ” இந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஒன்றிய அரசு பரிசீலிக்கும் என நீதிமன்றம் நம்புவதாகவும், இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது வழக்கை முடித்து வைத்தனர் ” என ஜூன் 3-ம் தேதி இந்து தமிழ் திசை செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு ஒன்றிய அரசு 600 கோடி முதலீடு செய்தும் மாநில அரசு எந்த பணிகளையும் துவங்கவில்லை என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக பரவும் தகவல் தவறானது.
அவர் அவ்வாறு கூறவில்லை. மாறாக, ஒன்றிய அரசின் 600 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கையே வைத்து உள்ளார்.
செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மற்றும் குத்தகைக்கு விடுமாறு தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டே இருக்கிறது என அறிய முடிகிறது.