பத்திரிக்கையாளர் கேள்விக்கு பயந்தோடிய ஒன்றிய அமைச்சர் மீனாக்ஷி லேகியின் நடனம் எனப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் சொல்ல பயந்தோடிய ஒன்றிய பாஜக அமைச்சர் மீனாச்சி லேகியின் தலை சிறந்த தரை நக்கி டான்ஸ் சாவார்கர் வாரிசுகள் ஆச்சே
மதிப்பீடு
விளக்கம்
பாஜக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராடி வந்தனர். இது குறித்து ஒன்றிய கலாச்சாரத்துறை இணையமைச்சர் மீனாக்ஷி லேகியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டபோது பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்தார். இந்நிகழ்வு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்குப் பதிலளிக்காத ஒன்றிய இணையமைச்சர் மீனாக்ஷி லேகி நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
மீனாக்ஷி லேகி நடனம் ஆடுவதாகப் பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், பரவக் கூடிய வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்டுகளுடன் ‘Loksatta’ என்னும் இணையதளத்தில் 2022, நவம்பர் மாதம் 7ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில் அந்த வீடியோ திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்றும், இணையத்தில் வைரலானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நடனம் ஆடக்கூடிய பெண் யார், எந்த ஊரில் எடுக்கப்பட்டது என எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. அவர் மீனாக்ஷி லேகியாக இருப்பின் நிச்சயம் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் அச்செய்தியில் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ 2022, மே மாதம் பதிவிடப்பட்டுள்ளது. இவை எதிலும் நடனம் ஆடக்கூடிய பெண்ணின் முகம் தெரியவில்லை.
View this post on Instagram
மேற்கொண்டு தேடியதில், தற்போது வைரலாகக் கூடிய வீடியோவை 2021, டிசம்பர் 26ம் தேதி ‘viralbhayani’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் கடைசியில் அப்பெண்ணின் முகம் தெரிகிறது.
அப்புகைப்படத்தையும் ஒன்றிய இணையமைச்சர் மீனாக்ஷி லேகியின் புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அது இணையமைச்சர் இல்லை என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்துப் பதிலளிக்காமல் ஓடிய பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் மீனாக்ஷி லேகி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.