போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை ஐ.நா நீக்கியதா ?

பரவிய செய்தி
போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ஐநாவில் இந்தியா ஆதரவு!
மதிப்பீடு
விளக்கம்
போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை ஐ.நா நீக்கியாகவும், அதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்ததாகவும் தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால், மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை அதிக ஆபத்து விளைவிக்கும் பட்டியலில் இருந்து வேறு பட்டியலுக்கே மாற்ற வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
ஆனால், உள்ளே செய்தியை சரியாக பதிவிட்டு வெளியே தலைப்பை மட்டும் தவறாக பதிவிட்டு உள்ளது தினமலர் செய்தி. ஆபத்து விளைவிக்கும் போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தித்தாள் குறித்தும் பதிவிடுமாறு ஃபாலோயர்ஸ் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் போதை மருந்துகளுக்கான ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. கஞ்சா மற்றும் அது சார்ந்தவற்றை ஆபத்தான போதைப் பொருள் பட்டியலில் இருந்து மறுவகைப்படுவது தொடர்பாக உலக சுகாதர அமைப்பு தொடர்ச்சியாக அளித்து வந்த பரிந்துரைகளை கருத்தில் கொண்டு போதை மருந்து ஆணையம் வாக்கெடுப்பை நடத்தி உள்ளது.
இந்த வாக்கெடுப்பில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட 27 நாடுகள் ஆதரவாக வாக்களித்து உள்ளன. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் எதிராக வாக்களித்து உள்ளன. ஆதரவாக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஆபத்தான பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
எனினும், கஞ்சாவை எவ்வாறு வகைப்படுத்துவது என்பது குறித்து அரசாங்கங்களுக்கு அதிகார வரம்பு இருப்பதன் காரணமாக, சர்வதேச கட்டுப்பாடுகளை தளர்த்துவது உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
” தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க ” கஞ்சாவை கண்டிப்பாக எங்கள் நாடு கட்டுப்படுத்தும் என சீனாவின் பிரதிநிதி தெரிவித்து இருந்தார். தங்கள் நாட்டில் கஞ்சாவின் மறுவகைப்படுத்துதல் ” சிகிச்சை நன்மைகளின் விஞ்ஞான ஆதாரங்களுக்கு ஏற்ப ” இருக்கும் என பிரிட்டனின் பிரதிநிதி கூறியுள்ளார்.
இந்தியாவில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் வளர்க்க, விற்பனை செய்ய, பயன்படுத்த அனுமதி இல்லை என்ற நிலையில் இந்தியா வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து உள்ளது. இதற்கு எதிர் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்தியா ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் தடை இல்லாமல் கஞ்சா விற்பனை இருக்கும் என கிண்டலாக மீம்ஸ் பகிர்ந்து வருகிறார்கள். அப்படியெல்லாம் நிகழ வாய்ப்பில்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.