GDP-ல் தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிய உ.பி என சாணக்யா வெளியிட்ட பொய் செய்தி !

2014-15 நிதியாண்டிலிருந்து தற்போது வரை GDP-ல் உ.பியை விட முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு..!

பரவிய செய்தி

தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய உ.பி; நாட்டின் 2-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியது உத்தர பிரதேசம். நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் உத்தர பிரதேசத்தின் பங்களிப்பு 9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15.7 % பங்களிப்புடன் மஹாராஷ்டிரா முதல் இடத்திலும், 9.1% பங்களிப்புடன் தமிழகம் 3-ம் இடத்திலும் உள்ளது. – சாணக்கியா 

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒன்றிய புள்ளியியல் துறை ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் GDP (Gross Domestic Product) தரவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்நாட்டில் உற்பத்தியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் பணமதிப்பை அறிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் “நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் 2-வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி உத்தரப் பிரதேசம் முன்னேறியது ” எனக் குறிப்பிட்டு சாணக்யா தரப்பில் நியூஸ் கார்டு ஒன்று சமீபத்தில் வெளியாகியது. 

இதையடுத்து, தமிழ்நாட்டை உத்தரப் பிரதேச மாநிலம் பின்னுக்கு தள்ளியதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் இத்தகவலை வைரல் செய்யத் தொடங்கினர். இதே தகவலை ஏஎன்ஐ, டைம்ஸ் ஆப் இந்தியா, ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ், NDTV உள்பட பல்வேறு ஆங்கில ஊடகங்களும் வெளியிட்டு இருக்கின்றன.

உண்மை என்ன ? 

ஜி.டி.பி தொடர்பான ஆங்கில ஊடக செய்திகள், முதலீடு மற்றும் பங்குச் சந்தை கண்காணிப்பு தளமான ‘soic.in’ (school of Intrinsic Compounding) மூலம் வெளியான தகவலின் அடிப்படையில் செய்தியை வெளியிட்டு இருக்கின்றன.

X post link | Archive link

2023 டிசம்பர் 9ம் தேதி soic.in தளத்தின் எக்ஸ் பக்கத்தில், இந்திய வரைபடத்தில் மாநில வாரியாக GDP சதவீதம் குறிப்பிடப்பட்டு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும், “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

SOIC தளம் வெளியிட்ட GDP தரவுகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மாநில வாரியான GDP தரவுகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள மாநில வாரியான GDP சதவீதங்களைக் மொத்தமாகக் கூட்டியதில், மொத்த GDP சதவீதம் 108.6 % ஆக உள்ளது. மேலும் இதில் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு எந்தவொரு GDP சதவீதமும் குறிப்பிடப்படவில்லை.

இதில் பெரிய பொருளாதாரா மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவின் GDP மதிப்பையும், மேற்கு வங்கம் மாநிலத்த்தின் GDP-ஐ விட குறைவாக குறிப்பிட்டுள்ளனர். இதுவும் தவறான தகவலே.

மேலும் SOIC வெளியிட்டுள்ள கார்டில், இந்த தரவுகளுக்கான ஆதாரங்கள் குறித்தும் எதுவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதில் ஆதாரங்கள் சென்சக்ஸ் மற்றும் CLSA என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தன. CLSA குறித்து அவர்களின் இணையதளத்தில் ஆய்வு செய்ததிலும், மாநிலவாரியான GDP குறித்து அவர்கள் எந்தவித தரவுகளையும் சமீபத்தில் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

எனவே இது குறித்த உண்மைகளை தெரிந்து கொள்ள, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வலைத்தளப் பக்கத்தில் ஆய்வு செய்தோம். கடந்த நவம்பர் 25, 2023 அன்று இந்தியாவின் GDP குறித்த மாநிலவாரியான தரவுகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2004-2005 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான GDP தரவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் இதில் தற்போதைய 2022-2023 நிதியாண்டிற்கான GDP தரவுகளில், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மிசோரம் போன்ற பல மாநிலங்களுக்கான தரவுகள் இணைக்கப்படாமல் இருந்தன.

அதில், கடந்த 2004-2005 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான மொத்த GDP தரவுகளை ஆய்வு செய்து பார்த்தோம். அதில் 2004-05ஐ Base Year ஆக வைத்து கணக்கிடப்பட்ட தரவுகளின் படி, 2014-2015 ஆம் நிதியாண்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

இதே போன்று Base Year: 2011-12 தரவுகளின் படி, கடந்த 2011-2012 ஆம் நிதியாண்டிருந்தே உத்தரபிரதேசத்தை முந்தி தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருந்து வருகிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

2022-23 நிதியாண்டின் GDP தரவுகளின் படி, தமிழ்நாடு 23.6 லட்சம் கோடியுடனும், உத்தரப் பிரதேசம் 22.5 லட்சம் கோடியுடனும் உள்ளது. 2021-2022 நிதியாண்டிற்கான GDP-ல் மகாராஷ்டிரா 31.08 லட்சம் கோடிகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 20.7 லட்சம்  கோடிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதில் உத்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் முறையே 19.7, 19.6 மற்றும் 19.3 லட்சம் கோடிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதன்படி, 2021-2022 நிதியாண்டிற்கான மாநில வாரியான GDP தரவுகளை சதவீதமாக கணக்கிட்டு பார்த்ததில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் GDP பங்கீட்டு சதவீதங்கள் முறையே 12.97%, 8.65% மற்றும் 8.24% ஆக உள்ளன.

இதன் மூலம் உத்தரப்பிரதேசம் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி நாட்டின் பொருளாதரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த முடிகிறது.

2023-24 ஆம் நிதியாண்டிற்கான GDP:

இதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான GDP புள்ளிவிவரங்களுடன் கணக்கிட்டு 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான GDP கணிப்பை Forbes india ஊடகம், கடந்த நவம்பர் 09, 2023 அன்று வெளியிட்டுள்ளது. அதிலும் 38.79 லட்சம் கோடிகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 28.3 லட்சம் கோடிகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில், உத்தரப் பிரதேசத்தை பின்னுக்கு தள்ளி குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும், உத்தரபிரதேசம் 24.39 லட்சம் கோடிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) vs தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per Capita):
GDP என்பது ஒரு நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் செயல்பாட்டின் கணக்கீட்டைக் குறிக்கும். அதே சமயம் தனிநபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP per Capita) என்பது ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் மீதும் உள்ள சராசரி நிதி வருமானத்தை தீர்மானிக்க, அதன் மொத்த ஜிடிபியை அதன் மொத்த மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
.
எனவே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, GDP யைக் கொண்டு கணக்கிடுவதைக் காட்டிலும், தனிநபர் வருமானத்தைக்( per Capita) கொண்டு கணக்கிடுவதே சிறந்த முறை என முன்னாள் RBI கவர்னரான C ரங்கராஜன் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருந்தாலும், கடந்த ஜனவரி 2023 தரவுகளின் படி, தனிநபர் வருமானத்தில் (per Capita) 142-வது இடத்தில் இருக்கிறது.
புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2021-22ல் மாநில வாரியாக தனிநபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP Per Capita at Constant Prices) உத்தரப் பிரதேசத்தில் ரூ42,525 ஆகவும், தமிழ்நாட்டில் ரூ1,54,427 ஆகவும் உள்ளது.
.
.
.
முடிவு:
நம் தேடலில், GDP-ல் தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிய உத்தரப் பிரதேசம் எனப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader