உ.பி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காணிக்கைக்கு 6% ஜிஎஸ்டி விதிக்க சட்டமா ?

பரவிய செய்தி
கிறித்துவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கின்ற உண்டியல் காணிக்கைக்கு 6 விழுக்காடு ஜிஎஸ்டி – உத்தரப்பிரதேச அரசு புதிய சட்டம்.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்படும் உண்டியல் காணிக்கைக்கு 6 சதவீத ஜிஎஸ்டி விதிக்க அம்மாநில அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
தேவாலயங்களின் காணிக்கைக்கு ஜிஎஸ்டி விதிக்க யோகி ஆதித்யநாத் அரசு புதிய சட்டம் கொண்டு வருவதாக சமூக வலைதளங்களில் வசைபாடி வருவதை பார்க்க முடிந்தது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
உத்தரப் பிரதேச அரசு கிறித்துவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கின்ற உண்டியல் தொகைக்கு ஜிஎஸ்டி விதித்து இருக்கிறதா அல்லது அப்படியொரு சட்டம் கொண்டு வரப்படுகிறதா எனத் தேடுகையில் அவ்வாறான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ, செய்தியும் வெளியாகவில்லை.
இதுதொடர்பான, கீ வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில் கடந்த 2018, 2019, 2021 என சில ஆண்டுகளாக இதே தகவலுடன் பரவிய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளின் புகைப்படம் குறித்து வெளியிட்ட கட்டுரைகளே கிடைத்தன.
ஆனால், வைரல் செய்யப்பட்ட டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாள் பக்கமும் போலியான எடிட் செய்யப்பட்டது. இது 2010-ம் ஆண்டு வெளியான செய்திகளை கொண்ட பக்கம். அந்த பக்கத்தில் எடிட் செய்து இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, 2021 ஜனவரியில் கட்டுரை வெளியிட்ட விஸ்வாஸ்நியூஸ் எனும் இணையதளம் உத்தரப் பிரதேச பாஜகவின் செய்தித்தொடர்பான ராகேஷ் திரிபாதி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ” கிறித்துவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்படும் உண்டியல் காணிக்கைக்கு 6 % ஜிஎஸ்டி ஏதும் விதிக்கவில்லை என பரவும் செய்தியை மறுத்து இருக்கிறார் ” என வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கிறித்துவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கின்ற உண்டியல் காணிக்கைக்கு 6 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்க உத்தரப் பிரதேச அரசு புதிய சட்டம் கொண்டு வந்ததாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. அப்படி எந்த சட்டமும் கொண்டு வரவில்லை என்பதையும், சில ஆண்டுகளாவே இப்படியொரு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்பதையும் அறிய முடிந்தது.