கொரோனா எதிரொலியால் உபி-யில் மாடுகளுக்கு மாஸ்க் அணிவிக்க உத்தரவா?

பரவிய செய்தி
உத்திர பிரதேசத்தில் உள்ள மாடுகளை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க அவற்றுக்கு மாஸ்க் மாட்டிவிட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சறுத்தல் நிலவி வரும் வேளையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாடுகளை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க மாடுகளுக்கு மாஸ்க் அணிவிக்க வேண்டும் என்ற உத்தரவை யோகி ஆதித்யநாத் அரசு பிறப்பித்து உள்ளதாக மாடுகளுக்கு மாஸ்க் அணிவித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கொரோனா வைரஸில் இருந்து மாடுகளை பாதுகாக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவை பிறப்பித்ததா என ஆராய்கையில், அதுதொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
ஆகையால், சில முகநூல் குழுக்களில் வேகமாக பரவி வரும் யோகி ஆதித்யநாத் மாஸ்க் அணிந்த மாடுகளுடன் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படங்கள் நமக்கு கிடைத்தன. அப்புகைப்படங்களில் மாடுகளுக்கு மாஸ்க் அணிவிக்கப்படவில்லை.
2017-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நியூஸ் 18 இணையதளத்தில் ” Yogi Adityanath’s ‘Favourite’ Cows to Follow Him to His New Residence ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் யோகி ஆதித்யநாத் மாடுகளுக்கு உணவு வழங்குவதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் பதிவாகி இருக்கிறது. பிற மொழிகளில் வெளியான செய்திகளிலும் அப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
3 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான புகைப்படத்தில் இருக்கும் மாடுகளுக்கு போட்டோஷாப் மூலம் மாஸ்க் அணிவித்து வைரல் செய்து உள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. நையாண்டிக்காகவோ அல்லது அரசியல் சார்ந்த தவறான செய்தியை பரப்பவோ இதுபோல் போட்டஷோ செய்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கலாம்.
மேலும் படிக்க : ஜாக்கிசானையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் வதந்தி !
கொரோனா வைரஸ் குறித்து இந்தியாவில் பல்வேறு வதந்திகள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. இந்நிலையில், நையாண்டித்தனமான போட்டோஷாப் புகைப்படங்களையும் வைரல் செய்து வருகின்றனர். தேவையற்ற செய்திகளை பகிர்வதை தவிர்த்து உண்மையான தகவலை அறிந்து பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.