This article is from Jun 08, 2020

கொரோனா போக பெண்ணின் நாக்கை அறுத்து சிவனுக்கு பூஜை செய்தார்களா ?

பரவிய செய்தி

கடந்த மே 23ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலம் பண்டல் கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம்னு 8 ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியின் நாக்கை அறுத்து சிவன் கோயிலுக்கு பூஜை பண்ணிருக்காங்க. பூஜை பண்ணியவனின் புனிதமான நாக்கை அறுத்து பலி குடுத்துருந்தா கடவுள் ஏத்துக்க மாட்டாரா??

Facebook link | archive link

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரசில் இருந்து ஊரைக் காப்பாற்றுவதற்காக 16 வயது மாணவியின் நாக்கை அறுத்து சிவன் கோவிலில் பூஜை செய்துள்ளனர் என வாயில் இரத்த காயத்துடன் இருக்கும் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Facebook link | archive link 

நாக்கு அறுந்த நிலையில் வாயில் இரத்தத்துடன் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் நீலம் பண்பாட்டு மையம் எனும் ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு ட்வீட் பதிவை பகிர்ந்து உள்ளனர். அந்த ட்வீட் பதிவில், இக்காரியத்தை பிராமணர்கள் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 வயது மாணவியின் நாக்கு அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சில கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிய பொழுது, மே 22-ம் தேதி நியூஸ் 18 ஹிந்தி செய்தி ஒன்று கிடைத்தது.

அதை மொழி மாற்றம் செய்து பார்க்கையில், ” பண்தா பகுதியின் பாட்வால் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பெண் கொரோனா வைரசில் இருந்து கிராமத்தைக் காப்பாற்ற மூட நம்பிக்கையால் தன்னுடைய நாக்கை அறுத்து சிவன் கோவிலில் வழிபட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மே 20-ம் தேதி நிகழ்ந்துள்ளது. அந்த பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. எனினும், விசாரணை நடைபெற்று வருவதாகவும், பிறரின் தூண்டுதலால் இச்சம்பவம் நிகழவில்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பண்தா பகுதியின் ஏஎஸ்பி லால் பாரத் குமாரை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” அந்த பெண்ணே தானாக நாக்கை அறுத்து உள்ளார். மற்றபடி வைரலாகும் தகவல்கள் தவறானது ” எனப் பதில் அளித்துள்ளார்.

இதற்கு முன்பாக குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்த 24 வயதான புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தன்னுடைய நாக்கை அறுத்துள்ளதாக ஏப்ரல் 19-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் சில இந்தியாவில் நடந்துள்ளன.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, கொரோனா வைரசில் இருந்து கிராமத்தைக் காப்பாற்ற 16 வயது பெண் மூடநம்பிக்கையால் தன்னுடைய நாக்கை சிவன் கோவிலில் அறுத்து உள்ளார். ஆனால், ஊர் மக்கள் செய்ததாக, பிராமணர்கள் செய்ததாக தவறான தகவல் பகிரப்பட்டு உள்ளது. மக்களிடத்தில் இருக்கும் மூடநம்பிக்கையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader