உ.பியில் துப்பட்டாவை இழுத்து சிறுமி உயிரிழப்பிற்கு காரணமானவர்களின் நிலை எனப் பரவும் ராஜஸ்தான் வீடியோ

பரவிய செய்தி
லவ் ஜிகாத்தா பண்றீங்க. பார்க்கவே கண்ணுக்கு குளுமையா இருக்க. உங்க வீட்டு பொண்ணுங்க புர்கா போடனும், மத்தவீட்டு பொண்ணுங்களோட துப்பட்டாவ புடிச்சி இழுப்பீங்களா.. ரோட்டில அடிபட்ட சப்பானி் மாறி அலஞ்சாதா தெரியும்.
மதிப்பீடு
விளக்கம்
உபியில் பெண்ணின் துப்பட்டாவை இழுத்தவர்களின் நிலை என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றது. அந்த வீடியோவில் பலத்த காயங்களுடன் காலில் கட்டுப் போட்ட மூன்று இளைஞர்கள் நடக்க முடியாமல் ஊர்ந்து செல்வதையும் காண முடிகிறது.
Love jihadha பண்றீங்க.. உங்களுக்கு யோகி்ஜீ தான்டா லாயக்கு… 🔥🔥
பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு…
உங்கவீட்டு பொண்ணுங்க புர்கா போடனும், மத்தவீட்டு பொண்ணுங்களோட துப்பட்டாவ புடிச்சி இழுப்பீங்களா..😡🤬
ரோட்டில அடிபட்ட சப்பானி் 🐕🐾 மாதிரி அலஞ்சாதான் தெரியும்..😡 pic.twitter.com/VoP3TcSR4j
— Srinithi🚩🚩🚩 (@Srinithiarun) September 23, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் சம்பவம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், NDTV இணையதளத்தில் வெளியான செய்தியில், உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி வெள்ளிக்கிழமை தனது நண்பருடன் பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பட்டாவை இழுத்துச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார் .
சிறுமி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி இறந்தார் என்று போலீசார் தெரிவித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக பைசல், ஷாபாஸ் மற்றும் அர்பாஸ் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறித்தும் அதில் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் பரவி வரும் வீடியோ இந்த உபி செய்தியுடன் தொடர்புடையது அல்ல என்பதை வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதன் மூலம் அறிந்து கொண்டோம்.
இதே வீடியோவை குறிப்பிட்டு “First India Source” தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், ” மூன்று பேரும் ‘பரத்பூரில் அஜய் ஜம்ரி கொலை வழக்கில்’ குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்த நபர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்றனர், அவர்கள் தப்பிக்கும் போது சுட்டப்பட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது உ.பி சிறுமியின் மரணத்துடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டு உள்ளதையும் காண முடிந்தது
இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் 06 அன்று Etvbharat வெளியிட்ட செய்தியில், “ராஜஸ்தானின் பாரத்பூர் நகரின் ஹிரதாஸ் சௌராஹா பகுதியில் ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை அஜய் ஜம்ரியை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு காவல்துறையினருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதில் மூன்று குற்றவாளிகளின் காலில் சுடப்பட்டனர். காயமடைந்த மூன்று குற்றவாளிகளும் RBM மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மூன்று பேரும் மருத்துவமனைகளில் இருந்து வெளியே வரும் போது தான் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவை உபியில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடையது எனப் பலரும் சமூக ஊடகங்களில் தவறாக பரப்பி வருகினறனர்.
முடிவு :
நம் தேடலில், ராஜஸ்தானில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரால் காலில் சுடப்பட்ட சம்பவத்தை, உத்தரப் பிரதேசத்தில் சிறுமியின் துப்பட்டாவை இழுத்து விபத்துக்குள்ளாக்கிய மூன்று பேருடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.