This article is from Jan 19, 2022

உ.பி கோரக்பூர் எரிவாயுக் குழாய் திட்டம் எனப் பரப்பப்படும் ஜெர்மனி புகைப்படம் !

பரவிய செய்தி

உலகின் மிக நீளமான எல்பிஜி குழாய் ஆனது உபி மாநிலம் கோரக்பூரில் 2023-ல் தொடங்க இருக்கிறது. கண்ட்லா-கோரக்பூர் குழாய் வழித்தடம் 10,000 கோடியில் உருவாக்கப்படுகிறது. 2757 கி.மீ தொலைவு நீளம் கொண்ட குழாய் மூலம் 34 கோடி வீடுகளுக்கு எரிவாயு வழங்கப்படும். 

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் ஆளும் பாஜக கட்சி தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உலகிலேயே மிக நீளமான எரிவாயுக் குழாய் வழித்தடம் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் அமைக்கப்படுவதாக புகைப்படத்துடன் கூடிய மீம் பதிவு ஒன்று பிரதமர் மோடியின் ஆதரவு பக்கமான Nation With Namo-ல் வெளியாகி வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் கோரக்பூர் எரிவாயுக் குழாய் திட்டம் எனும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2010-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தி நியூயார்க் டைம்ஸ் செய்தியில் ஜெர்மனியின் லூப்மின் பகுதியில் குழாய்கள் பதிக்கப்படுவதாக புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.

புகைப்பட விற்பனைத்தளமான Getty Image இணையதளத்தில், ” 2010 ஏப்ரல் 8-ம் தேதி ஜெர்மனியின் லூப்மின் அருகே OPAL குழாய் வழித்தடத்திற்கான குழாயின் ஒரு பகுதியை கிரேன்கள் மூலம் தரையில் இறக்குவதை ஊழியர் உரக்கச் சொல்கிறார். OPAL மற்றும் NEL குழாய்கள் ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயுவை பால்டிக் கடலில் இருந்து நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வழியாக ஜெர்மனி மற்றும் ஐரோப்பியாவின் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லும் ” என இடம்பெற்று இருக்கிறது.

அடுத்ததாக, 2,805 கி.மீ காண்ட்லா-கோரக்பூர் எரிவாயுக் குழாய் வழித்தட திட்டம் குறித்து தேடுகையில், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே இந்தியன் ஆயில், பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது என அறிய முடிந்தது.

2019-ல் 9000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது இத்திட்டம் 10,088 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த எரிவாயுக் குழாய் திட்டம் இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்ததாக 2019-ல் தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : பாஜக தலைவர்கள் பகிர்ந்த நொய்டா விமான நிலைய வீடியோவில் சீனா, தென் கொரியா படங்கள் !

இதற்கு முன்பாக, நொய்டாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய விமான நிலையம் என சீனா மற்றும் தென்கொரியா படங்கள் பயன்படுத்தப்பட்டு வீடியோக்கள், புகைப்படங்கள் தவறாக பகிரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

முடிவு : 

நம் தேடலில், காண்ட்லா-கோரக்பூர் எரிவாயுக் குழாய் வழித்தட திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும், அதற்காக பயன்படுத்தப்பட்ட புகைப்படம் ஜெர்மனி நாட்டில் 2010ம் ஆண்டு ஏப்ரலில் எடுக்கப்பட்டது. இந்தக் குழாய் ரஷ்யாவில் இருந்து மேற்கு ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader