டெல்லியைத் தொடர்ந்து உ.பியிலும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் புத்த மதம் மாறியதாகப் பொய் செய்தி !

பரவிய செய்தி

நாங்கள் வேசி மகன்கள் அல்ல! சூத்திர பட்டத்தை சுமந்து கொண்டு, பார்ப்பனர்களின் வேசி மகன்களாக இருப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. டெல்லியில் 10,000 இந்துக்கள் புத்த மதத்திற்கு மாறியதைத் தொடர்ந்து, நேற்று உத்திரபிரதேசத்திலும் பௌத்த மதத்திற்க்கு மாறிய பல்லாயிரக் கணக்கான இந்துக்கள். எப்போதும் இல்லாதவாறு, BC/MBC பிரிவு இந்துக்கள் புத்தமதம் நோக்கிச் செல்வது பேசு பொருளாக மாறியுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் 10,000 இந்துக்கள் புத்த மதத்திற்கு மாறினார்கள். அதனைத் தொடர்ந்து உத்திரப் பிரதேசத்திலும் சூத்திர பட்டத்தைச் சுமந்து கொண்டு இருப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை எனப் பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் பௌத்தம் மதத்திற்கு மாறியுள்ளனர். 

மேலும் எப்போதும் இல்லாத அளவிற்குப் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் புத்த மதம் மாறுவது பேசு பொருளாக மாறியுள்ளது எனக் கதிர் நியூஸின் கார்டு ஒன்றினை விடுதலை சிறுத்தை கட்சியைச் சார்ந்த கந்தசாமி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை சுமார் 1000 பேர் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

கதிர் நியூஸ் இணைய பக்கம் பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்களால் நடத்தப்படுகிறது. அதன் சமூக வலைத்தளங்களில் டெல்லியில் நிகழ்ந்த பௌத்த மத மாற்றம் குறித்தோ, உத்திர பிரதேச மதமாற்றம் குறித்தோ எந்த நியூஸ் கார்டும் இல்லை. மேலும், அவர்களது இணைய பக்கத்திலும் டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் ராஜினாமா செய்த செய்தி மட்டுமே உள்ளது. 

கடந்த 5ம் தேதி டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் பவனில் “ஜெய் பீம்” இயக்கத்தினர் புத்த மத மாற்ற நிகழ்வு ஒன்றினை ஒருங்கிணைத்து உள்ளனர். அதில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் புத்த மதம் மாறியுள்ளனர். 

Twitter link  

இந்த நிகழ்வில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்வு குறித்தான புகைப்படங்களைத் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அப்பதிவில், 10,000-க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள் புத்தரின் தம்மத்திற்குத் திரும்பி, ஜாதியற்ற மற்றும் தீண்டாமையற்ற இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுத்தனர் எனப் பதிவிட்டுள்ளார்.

அந்த மத மாறும் நிகழ்ச்சியில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் புத்த மதம் மாறிய போது முன்வைத்த 22 வாக்கியங்களைப் படித்து உறுதி மொழி ஏற்றுள்ளனர். மேலும், இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை வழிபட மாட்டேன்’’ என்றும் உறுதி மொழி ஏற்றுள்ளனர்.

அமைச்சர் ஒருவர் மதமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பால் கௌதம் தனது அமைச்சர் பதவியைக் கடந்த 9ம் தேதியன்று ராஜினாமா செய்தார்.

இதே போல் உத்திரப் பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் சூத்திரராக இருக்க விரும்பாமல் புத்த மதம் மாறியுள்ளனர் என நியூஸ் கார்டில் குறிப்பிட்டு இருப்பது போல எந்த ஒரு நிகழ்வும் அம்மாநிலத்தில் நிகழவில்லை.

கதிர் நியூஸ் கார்டில் இருக்கும் புகைப்படமானது, டெல்லியில் நடந்த புத்த மதம் மாறும் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. இதனை ராஜேந்திர பால் கௌதம் அக்டோபர் 5ம் தேதி அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதைக் காண முடிகிறது. அந்த புகைப்படத்தினை எடிட் செய்து உத்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்த புத்த மத மாற்றம் எனப் பரப்பி வருகின்றனர்.

முடிவு :

நம் தேடலில், டெல்லியைத் தொடர்ந்து உத்திரப் பிரதேசத்திலும் பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் புத்த மதம் மாறினார் எனப் பகிரப்படும் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader