உ.பியில் பசு மாட்டைத் தாக்கிய நபரை காவல் துறையினர் தாக்கியதாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேசத்தில் பசு மாட்டைச் சித்திரவதை செய்த இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்து கடுமையாகத் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வலதுசாரி ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு தேசத் துரோகி பசு மாட்டோட கழுத்தைப் பிடிச்சு நசுக்கி, அதை வீடியோவா எடுத்து,ஃபேஸ்புக்கு, வாட்ஸ்அப்புன்னு அனுப்புனான்.
"பசுமாட்டை கொல்லுவேண்டா, திம்பேண்டா, உரிமைடா, யாராலயும் என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடா" ன்னு வேற பேசி வெச்சுட்டான்.
அப்புறம் என்ன? pic.twitter.com/RkR076iCSr— Suresh நீலகண்டன். 1 (@Suresh33737771) March 19, 2023
மேலும், பசு மாட்டைத் தாக்கிய நபர் “பசுமாட்டை கொல்லுவேண்டா, திம்பேண்டா, உரிமைடா, யாராலயும் என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடா” எனப் பேசியதாகவும் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன ?
காவலர்கள் தாக்கும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடிய போது, அந்நிகழ்வு உத்தரப் பிரதேச மாநிலம், சந்தெளலி மாவட்டத்திலுள்ள மத்தெலா என்னும் கிராமத்தில் நிகழ்ந்தது என்பதை அறிய முடிந்தது.

2021, மே மாதம் உள்ளூரில் உள்ள செல்போன் கடையில் திருடியதாக மூன்று சிறுவர்களைக் காவல் துறையினர் பிடித்துள்ளனர். அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனைத் தொடர்ந்து சில இந்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அச்சிறுவர்களை மிகக் கடுமையாகத் தாக்கிய காவலரை சஸ்பெண்ட் செய்ததோடு, சந்தெளலி காவல் துறையின் சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்த வீடியோ 2022, மார்ச் மாதம், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கத்தை எழுப்பிய நபரை காவல்துறையினர் பிடித்து ‘டீல்’ செய்த விதம் எனப் பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து சந்தெளலி காவல்துறை அப்போதே விளக்கம் அளித்திருந்தது. வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டுவதற்காகச் சிலர் இந்த வீடியோவை தவறாகப் பரப்பியிருந்தனர்.
प्रकरण एक वर्ष से अधिक पुराना है जिसमें बच्चे के साथ किए गए अमानवीय व्यवहार के कारण तत्समय दोनों पुलिसकर्मियों को निलंबित करते हुए विभागीय कार्रवाई की जा चुकी है। कृपया पूर्ण तथ्य एवं स्पष्ट जानकारी के बिना किसी चीज़ को प्रसारित करने से बचें।@UPPViralCheck https://t.co/7Tx0ncnOOg pic.twitter.com/CointCNYZY
— Chandauli Police (@chandaulipolice) March 20, 2022
இதிலிருந்து காவல் துறையினர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கும் வீடியோ உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மத்தெலா என்னும் கிராமத்தில் செல்போன் கடையில் திருடிய சிறுவன் மீது நிகழ்த்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது. ஆனால், இளைஞர் ஒருவர் மாட்டின் கழுத்தைப் பிடித்து சித்ரவதை செய்யும் வீடியோ குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் பசு மாட்டை தாக்கியவரைக் காவல் துறையினரால் தண்டிக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல. அது செல்போன் கடையில் திருடிய சிறுவனைக் காவல் துறையினர் தக்கிய வீடியோ என்பதை அறிய முடிகிறது.