This article is from Mar 21, 2018

50,000 கிலோ மரத் துண்டுகளை எரித்து காற்றை சுத்தம்(?!) செய்கிறார்களாம் !

பரவிய செய்தி

உத்தரப்பிரதேசத்தில் காற்று மாசை குறைக்க 50,000 கிலோ மரத் துண்டுகளை எரித்து யாகம் நடத்த இந்து அமைப்பு திட்டமிட்டுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

மரங்களை வெட்டி அதன் துண்டுகளை யாகத்தில் எரிப்பதால் காற்று மாசு குறையும் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை கண்டறிந்ததாகச் சிலர்  சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். 50,000 கிலோ மரம் வெட்டப்பட்டு அதை எரித்தால் அது சுற்றுச்சூழல் கேடு அல்லவா ? மத நம்பிக்கை சரி ஆனால் அதோடு மாசு குறையும் என்று சொல்வதுதான் கேலிக்குரிய விஷயமாக்கி விட்டது .

விளக்கம்

 உத்தரப்பிரதேசத்தின் மீரட் பகுதியில் இந்து அமைப்பு ஒன்று மார்ச் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியமஹாயாக்யா அல்லது இந்து மதச் சடங்கு என்ற நிகழ்ச்சியில் மாமரத்தின் மரத் துண்டுகளை எரிப்பதன் மூலம் காற்று மாசு குறையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஸ்ரீ ஆயுச்சண்டி மஹாயாக்யா சமிதி என்ற சடங்கில் 9 நாட்களில் 50,000 கிலோ மரத் துண்டுகளை யாகத்தில் இட்டு எரிப்பதால் நவராத்திரி காலத்தில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு திட்டமிட்டுள்ளனர்.

இதற்கென மீரட்டில் உள்ள பாயின்சாலி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 350 மதக் குருக்கள் கலந்து கொள்கின்றனர். இத்தகைய யாகமானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரையில் நடைபெறும். மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த சடங்கில் 108 யாக குண்டங்களை தயார் செய்து வைத்துள்னர்.

இச்சடங்கை நடத்தும் அமைப்பின் துணை தலைவர் கிரீஸ் பன்சால் கூறுகையில், இந்த யாகம் நிச்சயமாக காற்றை சுத்திகரிக்கும் மற்றும் காற்று மாசுப்பாட்டை குறைக்கவும் உதவும். மேலும், சமிதியின் பங்களிப்பானது மனிதகுலம் மற்றும் சுற்றுச்சூழல் நோக்கியும், ஓசோன் படலத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று கூறியுள்ளார்.

50,000 கிலோ மரத் துண்டுகளை எரிக்கும் சடங்கில் உத்தரப்பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட மறுத்துவிட்டது. காரணம் இது மதச் சடங்கு தொடர்பானது. ஆனால், 50,000 கிலோ மரத் துண்டுகளை எரிக்கும் போது கண்டிப்பாக காற்று மாசுப்பாடு ஏற்படும் என்று மீரட்டின் பிராந்திய அதிகாரி ஆர்.கே.தியாகி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த விசயத்தில் விசாரனை ஏதும் மேற்கொள்ள எவ்வித கொள்கையும் இல்லை. ஆகையால், கருத்து தெரிவிக்க மட்டுமே என்னால் முடியும் என்று கூறியுள்ளார்.

சமிதியின் தலைவர் ஞானேந்திரா அகர்வால் அளித்த பேட்டியில், “ மாமரத்தின் மரத் துண்டுகளை தீயில் இட்டு எரிக்கும் போது அதன் மீது சுத்தமான நெய்யை கொட்டுவதால் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை. எள் விதைகள், அரிசி மற்றும் பார்லி உள்ளிட்டவற்றை சுத்திகரிக்கும் செயல்முறைக்கு பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். மேலும், விஞ்ஞான தகவலின்படி, இந்தியாவிற்கு மேலே உள்ள ஓசோன் படலத்தில் குறைவான பாதிப்புகளே உள்ளன, அதற்கு காரணம் அடிக்கடி நடைபெறும் யாகங்களே “ என கூறியுள்ளார்.

இந்தியாவில் 1990 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் தான் காற்று மாசுப்பாடு குறைந்ததாகவும், அதற்கு காரணம் வீடுகளில் திட எரிபொருளை உபயோகிக்கும் முறை குறைந்ததே. எனினும், வெளிப்புறங்களில் காற்று மாசுப்பாடு அதிகரிப்பது மக்கள் தொகை பெருக்கத்தால் என “Indian state level Disease Burden” என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில்தான் காற்று மாசுப்படுதல் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் காற்று மாசுப்பாடு அதிகளவில் உள்ளது என்று அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

50,000 கிலோ மரத் துண்டுகளை எரித்து காற்று மாசை குறைக்க முயற்சிக்கும் மதச்சடங்கை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவு செய்து வருகின்றனர்.

மாமரத்தின் துண்டுகளை எரித்து காற்றை சுத்திகரிக்கும் செயல்முறையான மதச் சடங்கில் அதை செய்பவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், அதனால் காற்று மாசு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியமே கூறியுள்ளது. எனினும், மதம் சார்ந்த சடங்கு என்பதால் அதில் அவர்களால் தலையிட முடியவில்லை.

சடங்குகளை தவிர்த்து நாட்டில் பெருகி வரும் தேவையற்ற வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவற்றை குறைத்து கொண்டும், அவற்றை சரியாக கையாண்டும் வந்தால் காற்று மாசை சிறிதளவிலாவது குறைக்க இயலும் என்ற நம்பிக்கை உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader