This article is from Jun 08, 2019

தாய் மொழியில் தேர்ச்சி பெறாத உ.பி நீட் தேர்வில் முதலிடமா ?

பரவிய செய்தி

உத்தரப்பிரதேசத்தில் +2 தேர்வில் ஹிந்தியில் தேர்ச்சி பெறாதவர்கள் 12,40,000 . ஆனால், நீட் தேர்வில் முதலிடம்.

மதிப்பீடு

சுருக்கம்

2019-ல் உத்தரப்பிரதேச மாநில பள்ளி பாடத்தில் முதன்மை மொழியாக இருக்கும் ஹிந்தியில் தேர்ச்சி பெறாத 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடுகிறது.

நீட் தேர்வில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் அல்ல. 2019-ல் தேர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட இடம்பெறவில்லை.

விளக்கம்

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்கும் தாய்மொழி பாடங்களில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் எப்பொழுதும் கவனிக்கப்படுபவையாக நிச்சயம் இருக்கும். அப்படி, உத்தரப்பிரதேசத்தில் தாய் மொழியாக இருக்கும் ஹிந்தியில் அம்மாநில பள்ளி மாணவர்கள் லட்சக்கணக்கில் தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பெரிதாய் பேசப்பட்டது.

நீட் 2019 தேர்வின் முடிவுகள் வெளியான பிறகு, உ.பி மாநிலத்தில் 12-ம் வகுப்பில் ஹிந்தி மொழியில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களின் எண்ணிக்கை 12 லட்சம், ஆனால் நீட் தேர்வில் அம்மாநிலம் முதலிடம் என மீம்களை பதிவிட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை ஆண்டு வாரியாக காண்போம்.

தேர்ச்சி பெறாத மாணவர்கள் :

2019-ம் ஆண்டு மாநில பள்ளித் தேர்வு முடிவில், தோராயமாக 10 லட்சம் மாணவர்கள் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெறவில்லை என செய்திகளில் வெளியாகியது. 10-ம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களில் 5.74 லட்சம் பேரும், 12-ம் வகுப்பில் 4.23 லட்சம் பேரும் ஹிந்தி பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.

2019-ம் ஆண்டில் மட்டும் 9.97 லட்சம் (10&12) மாணவர்கள் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பிற பாடங்களை ஒப்பிடும் பொழுது ஹிந்தி மொழியில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

2018-ம் ஆண்டில் மாநில பாடத்தில் கட்டாயமாக இருக்கும் ஹிந்தியில் 11 லட்சம் பேர் (10 & 12 வகுப்பு) தேர்ச்சி பெறவில்லை. இதற்கு முந்தைய ஆண்டில், 10-ம் வகுப்பில் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை 5.23 லட்சமாக இருந்துள்ளது. 2011-ம் ஆண்டில் இருந்தும் ஆண்டுதோறும் ஹிந்தியில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டுகிறது என செய்திகளில் குறிப்பிட்டு உள்ளனர்.

நீட் தேர்வில் உ.பி :

நீட் தேர்வில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் பிடிப்பதாக கூறுவது தவறு. 2019 நீட் தேர்வில் அம்மாநிலத்தின் தேர்ச்சி சதவீதம் 58.61%. இதற்கு முந்தைய ஆண்டில் நீட் தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம் 59.83 %.

2019 நீட் தேர்வு முடிவில் மாநிலங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தைப் பிடித்து உள்ளது. பட்டியலில் முதல் 10 இடங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் இடம்பெறவில்லை. 1,44,993 பேர் கலந்து கொண்ட உத்தரப்பிரதேச மாணவர்களில் 84,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், 2019 நீட் தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களில் 3 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஹிந்தியில் உபி ரொம்ப பரிதாபநிலை என்பது உண்மை, ஆனால் நீட் முதலிடம் என்பது பொய். டாப் 10 இல் உபி மாணவர்கள் சிலர் உண்டு அவ்வளவே

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader