Fact Checkஅரசியல்இந்தியா

உ.பியில் கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலையே செய்யவில்லை என யோகி ஆதித்யநாத் சொன்ன பொய் !

பரவிய செய்தி

கடந்த 6 ஆண்டுகளில் உ.பியில் எந்தவொரு விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை: யோகி ஆதித்யநாத்

மதிப்பீடு

விளக்கம்

த்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டுறவு கரும்பு மற்றும் சர்க்கரை ஆலை சங்கங்களில் அமைக்கப்பட்டு உள்ள வேளாண் இயந்திர வங்கி அமைப்புகளுக்கான 77 ட்ரக்டர்களை மார்ச் 6ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், ” கடந்த 6 ஆண்டுகளில்(அவருடைய ஆட்சியில்) உத்தரப் பிரதேசத்தில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை ” என்று பேசி உள்ளார்.

உண்மை என்ன ? 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், விபத்து மற்றும் தற்கொலை உள்ளிட்டவை குறித்த தகவலை தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் அறிக்கையாக வெளியிடுகிறது.

இந்திய அரசின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் இந்தியாவில் நிகழும் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலை (Accidental Deaths & Suicides in India – ADSI) தொடர்பான அறிக்கையில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிகை குறித்து ஆய்வு செய்தோம்.

2017ல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். ஆகையால், ஏடிஎஸ்ஐ தரவின்படி, 2017 முதல் 2021 வரையிலான ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த அனைத்து அறிக்கைகளிலும் அட்டவணை எண் 2.7ல் சொந்த நிலத்தில் விவசாயம் பார்க்கும் விவசாயிகள், குத்தகை நிலத்தில் விவசாயம் பார்க்கும் விவசாயிகள், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்ட எண்ணிக்கை பிரிக்கப்பட்டு உள்ளது.

2017ம் ஆண்டு அறிக்கையின்படி, சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் 94 பேர், நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் 16 பேர் , விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் 93 தற்கொலை செய்து உள்ளனர்.

2018ம் ஆண்டு அறிக்கையின்படி, சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் 36 பேர், நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் 44 பேர் , விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் 174 தற்கொலை செய்து உள்ளனர்.

2019ம் ஆண்டு அறிக்கையின்படி, சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் 92 பேர், நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் 16 பேர் , விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் 153 தற்கொலை செய்து உள்ளனர்.

2020ம் ஆண்டு அறிக்கையின்படி, சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் 60 பேர், நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் 27 பேர், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் 85 தற்கொலை செய்து உள்ளனர்.

2021ம் ஆண்டு அறிக்கையின்படி, சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் 7 பேர், நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டுகளை விட மிகக்குறைவு. எனினும், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் 226 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து உள்ளது.

2020  மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகள் கொரோனா வைரசின் பாதிப்பு உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2022ம் ஆண்டிற்கான அறிக்கை தற்போதுவரை வெளியாகவில்லை.

2017 முதல் 2021 வரையில் சொந்த நிலம் மற்றும் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயம் பார்க்கும் விவசாயிகள் 398 பேரும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 731 பேரும் உத்தரப் பிரதேசத்தில் தற்கொலை செய்து உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2016ம் ஆண்டில் சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் 53 பேர், நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள்16 பேர், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் 115 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க : உபி-யில் கலவரமே நடைபெறவில்லை என யோகி ஆதித்யநாத் தொடர்ந்து பேசும் பொய்

இதற்கு முன்பாக, யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் கலவரமே நடைபெறவில்லை என தொடர்ந்து பேசி வந்த பொய் குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், கடந்த 6 ஆண்டுகளில் உ.பியில் எந்தவொரு விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது பொய். உத்தரப் பிரதேசத்தில் 2017 முதல் 2021 வரையில் சொந்த நிலம் மற்றும் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் 398 பேரும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 731 பேரும் தற்கொலை செய்து உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button