This article is from Dec 14, 2021

பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய சென்னை நபரை உ.பி போலீஸ் கைது செய்தது எப்போது ?

பரவிய செய்தி

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக சென்னையைச் சேர்ந்த மன்மோகன் மிஸ்ரா என்பவரை கைது செய்த உத்தரபிரதேச போலீசார் !

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாகவும், முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் குறித்து பதிவிட்ட கருத்திற்கு மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு தமிழக பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

17 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதாகவும், சிஆர்பிசி சட்டத்தைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களில் வழக்கு தொடர முடியும் என திமுகவினரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்ததாக செய்திகளில் வெளியாகியது.

இப்படி அண்ணாமலை கூறி இருந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக சென்னையைச் சேர்ந்த மன்மோகன் மிஸ்ரா என்பவரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து உள்ளதாக பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.

Archive link 

உண்மை என்ன ?

பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதாக Update news 360 மற்றும் ஒரே தேசம் ஆகிய இரு நியூஸ் கார்டுகள் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையைச் சேர்ந்த மன்மோகன் மிஸ்ரா கைது செய்யப்பட்டது குறித்து தேடுகையில், ” 2021 ஆகஸ்ட் மாதம் கொரோனா குறித்து வதந்தி மற்றும் பிரதமர் மோடி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக 62 வயதான மன்மோகன் மிஸ்ரா என்பவரை உத்தரப் பிரதேச போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மன்மோகன் மிஸ்ரா 35 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறியதாகவும், தன்னுடைய யூடியூப் சேனலில் இந்தியில் வீடியோக்கள் வெளியிட்டதாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு குடியேறிய மன்மோகன் மிஸ்ரா பான் கார்டுகள் மற்றும் ஆதார் கார்டுகளை பெற ஏஜென்டாக பணியாற்றி வருவதாகவும், பிரதமர் மோடி மற்றும் பாஜக குறித்து அடிக்கடி யூடியூபில் வீடியோக்களை வெளியிடுவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், தமிழக காவல்துறையின் உதவியுடன் கைது செய்யப்பட்ட மன்மோகன் மிஸ்ரா இங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகே ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக சென்னையில் வசித்து வந்த மன்மோகன் மிஸ்ரா என்பவரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பே, தற்போது இல்லை. சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவத்தை தற்போது நடந்தது போல் தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader