உத்திரப் பிரதேசத்தில் கும்பல் ஒன்று காவல் துறையினரைத் தாக்குவதாகப் பரப்பப்படும் மேற்குவங்க வீடியோ !

பரவிய செய்தி
பீ ஜே பீ ஆளும் உத்திரபிரதேசத்தில் காவல்துறையின் நிலை இதுதான் பாசிஸ்ட்டுகள் ஆட்சியில் நேர்மையான காவல்துறை உயா் அதிகாாிகளின் நிலைமைகளை பற்றி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். அம்மாநில காவல் துறையினரைச் சிலர் கொடூரமாகத் தாக்குவதாக வீடியோ ஒன்றினை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
*பீ ஜே பீ ஆளும் உத்திரபிரதேசத்தில் காவல்துறையின் நிலை இதுதான் பாசிஸ்ட்டுகள் ஆட்சியில் நோ்மையான காவல்துறை உயா் அதிகாாிகளின் நிலைமைகளை பற்றி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்😕* pic.twitter.com/MRQ2Q7rQ4W
— KannappanDMK (@KannappanDMK2) April 27, 2023
உண்மை என்ன ?
காவலர்கள் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோவின் கீபிரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். இது குறித்து இந்தியா டுடேவின் கொல்கத்தா பிரிவு துணை ஆசிரியர் இந்திரஜித் குண்டு என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Shocking video has surfaced from #Kaliaganj yesterday where an angry mob can be seen thrashing #Bengal police officers after a protest march over the death of a minor turned violent in #Dinajpur. One civic volunteer is said to be in critical condition pic.twitter.com/LQ0cbjeBrl
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) April 26, 2023
அதில், தினாஜ்பூரில் சிறுமியின் மரணம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, ஆத்திரமடைந்த கும்பல் பெங்கால் காவல் துறையினரை அடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொண்டு இதுகுறித்துத் தேடியதில், 2023, ஏப்ரல் 26ம் தேதி ‘இந்தியா டுடே’ இணையதளத்தில் தாக்குதல் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கலியாகஞ்சி பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இறந்த அச்சிறுமியின் உடலைக் காவல் துறையினர் சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் கலியாகஞ்சி காவல் நிலையத்தைத் தாக்கியுள்ளனர். அப்போது அங்குள்ள காவலர்களையும் தாக்கியுள்ளனர்.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், பாஜகவினர் பீகாரிலிருந்து ஆட்களை வரவழைத்து வன்முறையைத் தூண்டி காவல் நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரேதப் பரிசோதனையில் அச்சிறுமி விஷம் குடித்து உயிரிழந்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான காயங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவற்றிலிருந்து காவல் துறையினரைச் சிலர் தாக்கும் சம்பவம் மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், உத்திரப் பிரதேச மாநிலத்தில் காவல் துறையினரைச் சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர் எனப் பரவும் வீடியோ மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியின சிறுமி மரணம் குறித்த போராட்டத்தின்போது நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.