உத்தர பிரதேச அரசு பள்ளிகளை பெருமைப்படுத்த தொடர்ந்து பரப்பப்படும் பொய்கள் – என்ன காரணம் ?

பரவிய செய்தி

இப்புகைப்படம், யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேச, சம்பல் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளி. இப்பள்ளி டெல்லியில் இருந்திருந்தால் சர்வதேச பத்திரிக்கைகளில் செய்தியாக வெளி வந்திருக்கும். 

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

பாஜகவின் ஆதரவாளர்கள் மற்றும் அதன் முக்கிய பொறுப்பாளர்களில் உள்ளவர்கள் ஒரு பள்ளியின் புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உத்திர பிரதேச அரசின் ஆரம்பப்பள்ளி எவ்வளவு மேம்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே டெல்லியாக இருப்பின் சர்வதேச ஊடகங்களில் செய்தியாகிருக்கும் எனக் கூறி இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தலைமையிலான அரசு பள்ளியின் கல்வி தரம் மேம்பாடு குறித்து, கடந்த ஆகஸ்ட், 16ம் தேதி ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை முதல் பக்க கட்டுரை ஒன்றினை வெளியிட்டது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் மற்றும் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பணம் கொடுத்து வெளியிடப்பட்ட கட்டுரையாக இருக்கும் என பாஜகவை சார்ந்த பலர் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டினை தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை மறுத்ததோடு, இது “unbiased” (சார்பற்ற) கட்டுரை என்றும் தெரிவித்தது.

இந்நிகழ்வை தொடர்ந்து, உத்தர பிரதேசத்திலுள்ள அரசு பள்ளியின் மேம்பாடு என்றும், இதுவே டெல்லியாக இருந்தால் சர்வதேச ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்கள் பகிர்ந்து வருகின்றனர். 

இவ்வாறு பரப்பப்படும் புகைப்படங்களில் சில போலியானதாகவும், தவறானதாகவும் இருந்ததை யூடர்ன் சமீபத்தில் கண்டறிந்து கட்டுரை வெளியிட்டது. 

உண்மை என்ன ?

தற்போது சமூக வலைத்தளங்களில் உத்திர பிரதேச அரசு ஆரம்ப பள்ளி என பகிரப்படும் புகைப்படத்தை ‘ரிவர்ஸ் இமேஜ் சர்ச்’ செய்த போது, கடந்த 2016ம் ஆண்டு, அக்டோபர் 19 தேதியன்று ‘ஒன் இந்தியா ஹிந்தி’ இணைய தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளதை அறிய முடிந்தது. இக்கட்டுரையில், இப்பள்ளி உத்திர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்திலுள்ள இட்டாய்லா மஃபி (Itayla Mafi) என்ற கிராமத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கபில் மாலிக் என்பவர் 2010ம் ஆண்டு இப்பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2013ம் ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.  பள்ளி தலைமை ஆசிரியரான பின்னர் தனது சொந்த பணத்தில் பள்ளியை தரம் உயர்த்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இது தொடர்பாக யூடூபில் தேடியதில், 2017 பிப்ரவரி மாதம் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றினை காண முடிந்தது. அதில் கபில் மாலிக் பள்ளியை சுற்றி காண்பித்து நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலில் பள்ளியை எவ்வாறு மேம்படுத்தினோம் என விளக்கியுள்ளார். 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக 2017, மார்ச் மாதம் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார். ஆனால் அதற்கு முன்பாகவே அப்பள்ளியின் மேம்பாடு குறித்து ஒன் இந்தியா ஹிந்தியில் கட்டுரை வெளிவந்துள்ளது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராவதற்கும் பாஜக ஆட்சிக்கு வருவதற்கும் முன்பாகவே கபில் மாலிக்’கின் முயற்சியால் இப்பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : உத்திர பிரதேச அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு எனப் பரப்பப்படும் பொய்

இதே போன்று, உத்திர பிரதேச அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு இது தான் என்று தலைப்பிட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. ஆனால், மாலக்பூர் பஞ்சாயத்து தலைவர் அமித் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சியினால் அந்த உணவு வழங்கப்பட்டது. இதில் தன்னார்வலர்கள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினரின் உதவியும் அடங்கியுள்ளது. இவ்வாறு பல்வேறு உதவிகளை கொண்டு அளிக்கப்பட்ட மதிய உணவை, உத்தர பிரதேச அரசால் வழங்கப்படும் மதிய உணவு என்ற தவறாக தகவலினை பாஜகவினர் பரப்பினர்.

முடிவு :

நம் தேடலில், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அரசு ஆரம்பப் பள்ளியின் மேம்பாடு என பரப்பப்படும் புகைப்படம் தவறானது. யோகி ஆதித்யநாத் உ.பி. முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னரே, அப்பள்ளியின் முதல்வர் கபில் மாலிக் முயற்சியால் அப்பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader