பிஜேபி தலைவர்களுடன் இருப்பது உபி பாலியல் வழக்கு குற்றவாளியின் தந்தையா?

பரவிய செய்தி
குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் காப்பாற்றப்படுகிறார் ? ஹத்ராஸின் மகள் மனிஷா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பின் தந்தையின் சில மறக்கமுடியாத படங்கள் அனைத்தையும் கூறிவிடும்.
மதிப்பீடு
விளக்கம்
2020 செப்டம்பர் 14-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் உயர் சாதியைச் சேர்ந்த 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 வயது தலித் பெண் செப்டம்பர் 29-ம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சந்தீப், அவரது மாமா ரவி, அவரின் நண்பர்கள் லாவ்குஷ், ராமு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காமல் குற்றவாளிகள் காப்பாற்றப்பட காரணம், குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் உடைய தந்தை பிஜேபி தலைவர்களுடன் இருப்பதாக பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் ஒருவர் இருக்கும் புகைப்படத்தை இந்திய அளவில் பகிர்ந்து வருகிறார்கள். எஸ்.பி உதயகுமாரன் முகநூல் பக்கத்தில் ஆயுஷ் தாபி எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான ட்வீட் பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட் பகிரப்பட்டு உள்ளது.
Take the conviction, why the accused are being saved? Some memorable pictures of the father of accused Sandeep, accused of Hathras’ daughter Manisha, tell everything. #DalitLivesMatter pic.twitter.com/IRWFC9gwST
— Aayush Dabi (@dabi_aayush) October 2, 2020
உண்மை என்ன ?
ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பின் தந்தை எனக் கூறி வைரல் செய்யப்படும் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அவர் உத்தரப் பிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பிஜேபி தலைவரான ஷ்யாம் பிரகாஷ் திவ்வேதி என அறிய முடிந்தது. அவர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் அவரின் சமூக வலைதள பக்கங்களில் பதிவாகி இருந்தவை.
அக்டோபர் 1-ம் தேதி ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் நியூஸ் 24 எனும் சேனலுக்கு அளித்த பேட்டியில், சந்தீப் உடைய தந்தை பேசுவது இடம்பெற்று இருக்கிறது.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் உடைய தந்தை என தவறாக பரப்பப்பட்ட பிஜேபி தலைவரான ஷ்யாம் பிரகாஷ் திவ்வேதி மீதும் சமீபத்தில் பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவாகி உள்ளது. ப்ரயாக்ராஜ் பகுதியில் பிஏ படிக்கும் மாணவி, திவ்வேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன் குடும்பத்தை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் புகார் அளித்து உள்ளார். இதுதொடர்பாக, திவ்வேதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பின் தந்தை என பிஜேபி தலைவர் திவ்வேதி உடைய புகைப்படங்களை தவறாக பரப்பி உள்ளனர்.மேலும், திவ்வேதி மீது வேறொரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகி இருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.