Fact Check
இவர் உ.பியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த பெண் அல்ல| வைரலாகும் தவறான புகைப்டம்!

பரவிய செய்தி
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த பெண் எனப் பரவும் புகைப்படம்.
மதிப்பீடு
விளக்கம்
செப்டம்பர் 14-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் தனது தாயுடன் வயலுக்கு சென்ற போது காணாமல் போனார். அப்பெண்ணை உயர்வகுப்பைச் சேர்ந்த 4 ஆண்கள் கடத்திக் கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வெளியில் எதையும் சொல்லக் கூடாது என்பதற்காக அப்பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளார்கள்.
Advertisement
கழுத்து, முதுகுப் பகுதியில் எலும்பு முறிவுகள், நாக்கில் படுகாயம் என கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண்ணை முதலில் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனர். பின்னர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அப்பெண் 2 வாரங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றன. குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், போலீசார் நெருக்கடியால் பெண்ணின் உடலை வேகவேகமாக அதிகாலையிலேயே தகனம் செய்ததாக பெற்றோர், உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில்தான், ஹத்ராஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த மனிஷா வால்மீகி எனக் கூறி வேறொரு பெண்ணின் புகைப்படத்தை சில ஹிந்தி இணையதளங்களும், இந்திய அளவில் சமூக வளைதளங்களிலும் பகிர்ந்து அப்பெண்ணின் இறப்பிற்கு நீதிக் கேட்டு வருகிறார்கள். புகைப்படத்தில் கரும்பு காடு பகுதியில் நிற்கும் பெண்ணின் பெயர் மனிஷா யாதவ்.
” பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் பெண் தன் சகோதரி அல்ல எனக் கூறி உள்ளார். புகைப்படத்தில் கரும்பு காடு பகுதியில் நிற்கும் பெண் யாரென்று தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் தெரிவித்து உள்ளனர். வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண் மனிஷா யாதவ் கடந்த 2018-ம் ஆண்டில் சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்த காரணத்தினால் உயிரிழந்தவர். இதுதொடர்பாக மருத்துவமனை மீது புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அப்பெண்ணின் சகோதரர் மனிஷாவிற்கு நீதி வேண்டும் என்கிற ஹாஷ்டாக்கை புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளனர் ” என இந்தியா டுடே செய்தி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
மனிஷா பெயரில் ஏற்பட்ட குழப்பத்தால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண் குறித்து பதிவிடும் பல பதிவுகளில் இப்பெண்ணின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தவறாக இப்பெண்ணின் புகைப்படத்தை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.