உ.பியில் ஆற்றில் குளித்த தலித் பெண்ணை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தாக்கும் வீடியோவா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால் தீட்டு ஏற்பட்டு விட்டதாகக் கூறி அப்பெண்ணை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கும்பல் கடுமையாக தாக்கும் காட்சி என 40 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோரத்தில் மேலாடை கலைந்த நிலையில் இருக்கும் பெண்ணை சிலர் கம்பால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
இளம்பெண் தாக்கப்படுவது குறித்த கீவார்த்தைகளை கொண்டு தேடுகையில், ” மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெண் தன் குடும்பத்தினரால் தாக்கப்படும் வீடியோ வைரலாகுவதாக ” இதே வீடியோவை 2021 ஜூலை 4-ம் தேதி NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.
” மத்தியப் பிரதேசத்தில் இருந்து வெளியான வீடியோக்களில் இரண்டு பெண்களை அறைந்து, உதைத்து, முடியை இழுத்து, கம்பால் குறைந்தது 7 பேர் அடித்துள்ளனர். பழங்குடிப் பெண்கள், அவர்களின் குடும்பத்தினரால் பொது மக்கள் மத்தியில் சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். ஏனெனில், அவர்கள் வெளிப்படையாக தங்கள் தாய்வழி உறவினர்கள் உடன் பேசிக் கொண்டிருந்தது குடும்பத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. பலர் சம்பவத்தை பார்த்து வீடியோக்களை பதிவு செய்தனர், ஆனால் பெண்களை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை
இக்கொடூரமான குற்றம் தார் மாவட்டம் பிபால்வா கிராமத்தில் நடந்தது. மற்றொரு வீடியோவில், அந்தப் பெண்ணின் தாயும் அறைந்து, முடியை இழுத்து, செருப்பால் அடித்து காட்டுமிராண்டித்தனமாக சித்திரவதை செய்துள்ளார். இந்த சம்பவம் ஜூன் 22-ம் தேதி நடந்து சில நாட்களுக்கு பிறகு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதன்பின் போலீஸ் தலையிட்டு, பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர் ” எனச் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களால் இரு பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோக்கள் வைரலாகியதாக இச்சம்பவம் குறித்து இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட செய்திகள் பலவற்றில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், உ.பி ஆற்றில் தலித் பெண் குளித்ததால் தீட்டுப்பட்டதாகக் கூறி ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பலின் கொடூரமான செயல் எனப் பரப்பப்படும் வீடியோ மத்தியப் பிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களால் பெண் தாக்கப்படும் வீடியோவாகும்.
2021 ஜூன் மாதம் குடும்ப விரோதம் காரணமாக பெண்கள் தாக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியதாகவும், தாக்கியவர்களை போலீசார் கைது செய்ததாகவும் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.