மணிப்பூரில் பெண் ஒருவர் நிர்வாணமாகக் காவலர்களைத் தாக்குவதாகப் பரவும் பொய் செய்தி !

பரவிய செய்தி
அடக்கொடுமையே….!! காதால் கேட்பதும் பொய் ! பத்திரிக்கைகள் பரப்புவதும் பொய் ! கண்ணால் பார்ப்பதே மெய் !!
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி சமூகத்தைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும் எனக் குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை மோதல் நிலவி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதனைக் கண்ட பிறகுதான் மணிப்பூரில் எவ்வளவு மோசமான சூழல் நிலவுகிறது எனப் பலரும் பேசத் தொடங்கினர். அது மட்டுமின்றி அம்மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜக அரசையும் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் மணிப்பூரில் பெண் ஒருவர் தன் ஆடைகளைக் கழட்டிவிட்டு நிர்வாணமாகக் காவலர்களைத் தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அப்பதிவுகளில் ‘காதால் கேட்பதும் பொய் ! பத்திரிக்கைகள் பரப்புவதும் பொய் ! கண்ணால் பார்ப்பதே மெய் !!’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
FACE BOOK ல வந்த NEWS
அடக்கொடுமையே
காதால் கேட்பதும் பொய் பத்திரிக்கைகள் பரப்புவதும் பொய் கண்ணால் பார்ப்பதே மெய் !!
என்னடா இது ஒத்த பொம்பள எல்லாத்தையும் அவத்து போட்டு அம்மணமா அத்தனை Police யையே ஓட விடுறா அடி பாவி மகளே.
Sorry Guys
வீடியோ போட விரும்பம் இல்லை❌ So Banned Video pic.twitter.com/Vb7rEY0ujO— . (@ARRKAY224) July 21, 2023
இந்த ஆபாச காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று தான் நினைதாதேன் ஆனால் இங்குள்ள காங்கிரஸ் திராவிட கட்சிகள் அரசியலாக்க பார்க்கின்றன மணிப்பூரில் நடைபெறும் காட்சிகள் தான் இது ஆனால் செய்திகளோ வெளியே என்னென்னவோ வருகின்றன உண்மை நிலையை மக்களுக்கு ஆதாரங்களோடு வெளியிட வேண்டும் pic.twitter.com/CsAkK66pLF
— Maha (@Maha39574742) July 21, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், ‘ஜீதேந்திர வர்மா ஜீது’ என்பவர் இதே வீடியோவை தனது டிவிட்டரில் 2023, மே 16ம் தேதி பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தை ஆய்வு செய்கையில் அவர் லக்னோ சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பதை அறிய முடிந்தது.
‘சண்டௌலி மாவட்டத்தின் (உத்தரப் பிரதேசம்) முகல்சராய் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் சோனு கின்னார் 834 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், பாஜக வேட்பாளர் மால்தி தேவி 138 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கையில் சோனு கின்னர் 440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது’ என அப்பதிவில் உள்ளது. ஜீதேந்திர வர்மாவின் அந்த டிவிட்டர் பதிவிலேயே திருநங்கைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட மற்றொரு வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.
चंदौली: निकाय चुनाव में सोनू किन्नर नाम के प्रत्याशी ने चुनाव जीतकर सबको चौंका दिया। हालांकि 13 मई को मतगणना के दौरान का एक वीडियो सामने आया है जिसमें किन्नर समाज के लोग नग्न होकर हंगामा करते नजर आ रहे हैं। दरअसल बीजेपी प्रत्याशी की ओर से रिकाउंटिंग की मांग को लेकर विवाद खड़ा हुआ… pic.twitter.com/OwtdJU4YiR
— UP Tak (@UPTakOfficial) May 16, 2023
இது தொடர்பாக ‘UP Tak’ தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சண்டௌலி: நகராட்சித் தேர்தலில், சோனு கின்னார் என்ற வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இருப்பினும், மே 13 அன்று, வாக்கு எண்ணிக்கையின் போது, கின்னரர் சமூக மக்கள் (திருநங்கைகள்) நிர்வாணமாகச் சலசலப்பை உருவாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மறு வாக்கு எண்ணும் கோரிக்கையில் தகராறு ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. UP Tak அவர்களது யூடியூப் பக்கத்திலும் இச்சம்பவம் குறித்த செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ‘நவ் பாரத் டைம்ஸ்’ இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும், ‘உத்தரப் பிரதேசம் சண்டௌலி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது போலீசாருக்கும் திருநங்கைகளுக்கும் இடையே மோதல். சிலர் ஆடைகளைக் களைந்து ரகளை” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து இச்சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது நடந்தது என்பதை அறிய முடிகிறது. அதனை மணிப்பூரில் நடந்தது எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : மணிப்பூர் கலவரத்திற்கு காங்கிரசே காரணமென மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கூறியதாகப் பாஜகவினர் பரவும் பொய் !
இதே போல் மணிப்பூர் கலவரத்துடன் தொடர்புப்படுத்தி வேறு பல பொய் செய்திகளும் பரப்பப்பட்டது. அவை குறித்த உண்மைத் தன்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மரின் பழைய வீடியோ !
முடிவு :
நம் தேடலில், மணிப்பூர் மாநிலத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாகக் காவலர்களைத் தாக்குவதாகப் பரவும் வீடியோ, உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.