உ.பி மகளிர் பேருந்து எனப் பதிவிட்ட மேற்கு வங்க பேருந்து படம்.. ட்ரோல் செய்யப்படும் ட்ரோல் பதிவு !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரில் இயங்கக் கூடிய கு.அண்ணாமலை ஆர்மி என்னும் டிவிட்டர் பக்கத்தில் பேருந்து ஒன்றின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேச மகளிர் பேருந்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யோவ்….அ.மலை,.உன் ஆர்மி பசங்களுக்கு இங்லீஷ் கத்துக்கெடு…கொட்டை எழுத்தைக் கூட படிக்கத் தெரியாத தற்குறிகளை வைத்துக்கொண்டு தலைவன்நான் என்று சீன் போடுற…
இந்த லட்சணத்துல யோகிடானு ஃபயர் விடுறானுங்க..🤣@annamalai_k pic.twitter.com/lDJFLH0i2p— இரத்தினவேலு வசந்தா. (@vasantalic) March 12, 2023
அண்ணாமலை ஆர்மி பதிவின் ஸ்கிரீன் ஷார்ட் குறிப்பிட்டு, அது மேற்கு வங்க பேருந்து என ‘We Dravidians’ என்னும் பேஸ்புக் பக்கம் முதற் கொண்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரவும் பேருந்து புகைப்படத்தில் ‘WBTC’ என உள்ளது. அதாவது, ‘West Bengal Transport Corporation’ என்பது அதன் பொருளாகும். அதேபோல், அப்பேருந்தின் எண்ணும் ‘WB 19L’ எனத் தொடங்குகிறது. இதனை இணையத்தில் தேடிப் பார்த்ததில் மேற்கு வங்கம், அலிப்பூர் பகுதி வாகனம் என அறிய முடிந்தது.
உத்தரப்பிரதேச பேருந்து எனப் பதிவிட்ட அண்ணாமலை ஆர்மி என்னும் டிவிட்டர் பக்கத்தின் உண்மையான பெயர் @KarthikGnath420 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அந்த டிவிட்டர் கணக்கின் கவர் படத்தில் சவார்க்கரை கிண்டல் செய்யும் விதமாகப் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த டிவிட்டர் பக்கம் அண்ணாமலை மற்றும் பாஜக குறித்த கிண்டல் பதிவுகளையும் பதிவிட்டுள்ளது. இதிலிருந்து இது ஒரு நையாண்டி (டிரோல்) பக்கம் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : குஜராத் அரசு மருத்துவமனை என சிங்கப்பூர் ஓட்டலின் படத்துடன் வைரலாகும் நையாண்டிப் பதிவு !
முன்னதாக இதே டிவிட்டர் பக்கம் குஜராத் அரசு மருத்துவமனை எனச் சிங்கப்பூர் ஓட்டலின் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தது. அப்போதும் இதே போல் பலரால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. அப்போதே இப்பக்கம் குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டிருந்தது.
அண்ணாமலை மற்றும் பாஜக குறித்து ட்ரோல் செய்யும் வகையில் இப்பக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகளை உண்மையென நினைத்து விமர்சிப்பதும், அது ட்ரோல் பதிவு எனத் தெரியாமல் ட்ரோல் செய்வதும் தொடர் கதையாக இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அண்ணாமலை ஆர்மி என்னும் பெயரில் இயங்கும் டிவிட்டர் பக்கம், உத்தரப்பிரதேச மகளிர் பேருந்து என மேற்கு வங்க பேருந்தைப் பதிவிட்டது ஒரு நையாண்டி பதிவு. இதனை உண்மை என நம்பி பலரும் அதற்குப் பதில் அளித்து வருகின்றனர்.