பிரான்ஸ் கலவரத்தை தடுக்க யோகி ஆதித்யநாத்தை அழைத்ததாக பரப்பப்படும் ஐரோப்பிய மருத்துவரின் போலி ட்விட்டர் பதிவு !

பரவிய செய்தி

பிரான்ஸ் நாட்டில் மத கலவரம். பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை. யோகி ஆதித்யநாத் அவர்களை அனுப்புங்கள். அவர் 24 மணி நேரத்தில் கலவரத்தை அடங்கிவிடுவார். – ஜெர்மன் பேராசிரியர் SOS செய்தி! யோகி டா..Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 27 அன்று நஹெல் என்ற 17 வயது இளைஞர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய மருத்துவரான ஜான் கேம் (John Camm) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பிரான்ஸ் கலவரத்தை தடுத்து நிறுத்த இந்தியாவின் உத்தரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத்தை உடனே பிரான்சிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று  பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் பதிவு குறித்து News18 Utter Pradesh, ABP செய்தியின் மூத்த ஆசிரியர் அபிஷேக் உபாத்யாய் உட்பட பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

Archive Link:

Archive Link:

Archive Link:

மேலும் யோகி ஆதித்யநாத்தின் அதிகாரப்பூர்வ அலுவலக கணக்கான Yogi Adityanath Office ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்வீட் பதிவு குறித்து பதிவு செய்துள்ளதையும் காண முடிந்தது.

உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ஐரோப்பிய மருத்துவரான ஜான் கேம் (Prof.N John Camm) எனும் ப்ளு டிக் உள்ள ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் 30 அன்று பரவி வரும் ட்வீட் பதிவு காணப்படுவதை அறிய முடிந்தது.

Archive Link

எனவே இந்த ட்விட்டர் பக்கம் குறித்து ஆய்வு செய்ததில், அவருடைய சுயவிவரத்தில் ஜெர்மனி என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவருடைய பக்கத்தில் பெரும்பான்மையான பதிவுகள் இந்திய அரசியலைப் பற்றியே பதிவு செய்யப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மருத்துவரான ரோஹின் பிரான்சிஸ் தன்னுடைய Medlife Crisis (Rohin) என்ற ட்விட்டர் பக்கத்தில், மருத்துவரான ஜான் கேமின் ட்விட்டர் பக்கம் குறித்து சந்தேகிப்பதாக மருத்துவர் ஒருவரின் புகைப்படத்தைப் பதிவிட்டு கேள்விகள் எழுப்பியிருந்தார்.

Archive Link

எனவே இது குறித்து அவருடைய இணையதளமான njohncamm.com பக்கத்தில் தேடியதில், மருத்துவரின் புகைப்படத்தை குறிப்பிட்டு, இதயநோய் நிபுணர் மற்றும் திட்ட இயக்குனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இணையதளத்தின் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் (Domain Registration) குறித்து தேடியதில், பதிவு செய்தவரின் பெயரில் மருத்துவர் ஜான் கேமின் பெயர் இல்லாமல் ‘டாக்டர் நரேந்திர யாதவ்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை உறுதி செய்ய Domain.com மற்றும் WhoIs போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தி njohncamm.com இணையதளம் குறித்த முழு விபரங்களையும் எடுத்தோம். அதிலும் பதிவு செய்தவரின் பெயரில் டாக்டர் நரேந்திர யாதவ் என்றே இருந்தது.

மேலும் இந்த இணையதளத்தில் ஜான் கேம் நிறுவனம் மற்றும் ஜான் கேம் கிளினிக் என்று குறிப்பிடப்பட்டு இரண்டு படங்கள் இடம்பெற்றிருந்தது.

அதில், முதல் புகைப்படம் குடியிருப்பு ஒன்றின் படத்தையும், மற்றொன்று ஸ்காட்லாந்தில் உள்ள நியூ ஸ்டோபில் மருத்துவமனையின் புகைப்படத்தையும் கொண்டிருந்தது. இதன் மூலம் இவை ஜான் கேம் நிறுவனத்தின் மருத்துவமனைகள் இல்லை என்பது உறுதியானது.

எனவே நரேந்திர யாதவ் யார் என்பது குறித்து தேடி பார்த்ததில், Listly இணையதளத்தில் அவருடைய முழு விபரங்களும் கிடைத்தன. இதிலுள்ள விபரங்கள் அனைத்தும் இறுதியாக ஆகஸ்ட் 2019-இல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள படி, நரேந்திர யாதவ் தனது MRCP (Member, Royal College of Physicians) படிப்பை St. Georges Hospital London (UK) என்ற மருத்துவமனையில் 2001-இல் முடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை njohncamm.com என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களோடு அப்படியே ஒத்துப் போகிறது.

மேலும், அவர் இங்கிலாந்தை தாயகமாகக் கொண்ட பிரவுன்வால்ட் ஹெல்த்கேர் குழுமத்தின் தலைவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த பிரவுன்வால்ட் ஹெல்த்கேர் குழுமம் குறித்து தேடும் போது, அது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக அம்ஜெத் உல்லா கான் என்ற நபர், நரேந்திர யாதவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் கடந்த 2019 மே 29 அன்று பதிவு செய்துள்ளார். அதில் பிரவுன்வால்ட் ஹெல்த்கேர் குழுமத்தின் தலைவராக உள்ள நரேந்திர யாதவும், அவருடைய மனைவியான திவ்யா ராவத்தும் காவல்துறையினாரல் துன்புறுத்தப்படுகின்றனர். அந்த பிரச்சனைக் குறித்த முழு விபரத்தையும் அறிந்தேன், அவர் மிகவும் மென்மையானவர். அவருக்கு நீதி கிடைக்கும் வரை துணை இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

எனவே இந்த விபரங்கள் குறித்து மேலும் தேடியதில், 2019 மே 25 அன்று டெக்கான் க்ரோனிக்கல், நரேந்திர யாதவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ராவத் காவல்துறையினாரல் கைது செய்யப்பட்டது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் NRI மருத்துவரான அவர் சட்ட விரோதமாக நடந்து கொண்டதற்காகவும், பவுலொமி மருத்துவமனையின் 100 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காத காரணத்தினாலும் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மேலும் ஐரோப்பிய மருத்துவர் ஜான் கேமின் உண்மையான விபரங்கள் குறித்து தேடியதில், Noac Education இணையதளத்தில் இவருடைய சுயவிவரங்களை காண முடிந்தது. அதில், பேராசிரியர் ஜான் கேம் 1986 முதல் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை கல்லூரியிலும், சமீபத்தில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியிலும் இருதய பேராசிரியராக இருந்தார். மேலும் லண்டனில் உள்ள ராயல் பிராம்ப்டன் மருத்துவமனையில் கௌரவ ஆலோசகராகவும் உள்ளார். எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவில் உள்ள Royal College of Physicians-இன் (RCP) உறுப்பினராகவும் உள்ளார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருத்துவர் ஜான் கேம் பெயரில் இணையதளம் மற்றும் ட்விட்டர் கணக்குகள் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பவரால் போலியாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிந்தது.

முடிவு:

நம் தேடலில், பிரான்ஸ் கலவரத்தை தடுக்க யோகி ஆதித்யநாத் பிரான்ஸ் வர வேண்டும் என ஐரோப்பிய மருத்துவர் ஜான் கேம் ட்வீட் செய்ததாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், ஜான் கேம் என்பவரது பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் கணக்கு மற்றும் இணையதளத்தை நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பவர் தான் இயக்கி வருகிறார் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader