உறையூர் கோவிலில் விண்வெளி வீரர், செல்போன் சிற்பம் உள்ளதா ?

பரவிய செய்தி
உலகின் கவனத்தை ஈர்க்கும். பஞ்சவர்ன்ஸ்வாமி கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ளது. தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. கோவில் சுவர்களில் சைக்கிள், விண்வெளி உடை அணிந்த விண்வெளி வீரர் மற்றும் செல்போன் போன்றவற்றின் சிலைகள் அன்றே சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. நவீன விஞ்ஞானம் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மெக்மில்லனால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுகிறது. பஞ்சவர்ணசாமி கோயில் புகழ் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சிராப்பள்ளி நகரத்தின் புறநகர்ப் பகுதியான உறையூரில் அமைந்துள்ளது. சிவன் ஐந்து வெவ்வேறு வண்ணங்களை (பஞ்சபூதங்களை) சித்தரிப்பார் என்று நம்பப்படுகிறது, எனவே பஞ்சவர்ணசாமி என்று அழைக்கப்படுகிறது. பஞ்சவர்ணசாமி 7 ஆம் நூற்றாண்டின் தமிழ் இந்து சைவ ஆன்மீக படைப்புகளான தேவாரத்தால் (நயனார்களால்) பாடல் பெற்ற புகழ் பெற்ற ஸ்தலமாகும்.
மதிப்பீடு
விளக்கம்
திருச்சி அருகே உறையூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான பஞ்சவர்ணசுவாமி கோவிலில் விண்வெளி வீரர், செல்போன் மற்றும் சைக்கிள் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளதாக சிறப்பதின் புகைப்படங்களுடன் கூடியப் பதிவுகள் முகநூல் உள்ளிட்டவையில் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இப்பதிவை பகிர்ந்து இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலை வைத்து வதந்திகளை பரப்புவது இது முதல்முறை அல்ல. வைரல் செய்யப்படும் பதிவில் இடம்பெற்ற விண்வெளி வீரர் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், அந்த சிற்பம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என தகவல்கள் கிடைத்தன.
2006-ம் ஆண்டில் போர்ச்சுகீசிய மொழியில் வெளியான கட்டுரையில், ” ஸ்பெயின் நாட்டில் உள்ள கதீட்ரல் ஆஃப் சலமன்கா எனும் தேவாலயத்தில் 1992-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளின் போது விண்வெளி வீரரின் சிற்பத்தை செதுக்கி உள்ளார்கள் ” எனப் புகைப்படத்துடன் கூறப்பட்டுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் பல இணைய ஆதாரங்கள் உள்ளன.
செல்போன் சிற்பமும் உறையூர் கோவிலைச் சேர்ந்தது அல்ல. அந்த செல்போன் சிற்பத்தின் முழுமையான புகைப்படத்தில் சிற்பத்தின் கீழே “1996” என வருடத்தை குறிப்பிட்டு உள்ளனர். புனரமைப்பு பணிகளின் போது நவீன காலத்திற்கு ஏற்ப புதுமையான விசயங்களை சிற்பங்களில் இடம்பெறச் செய்வது வழக்கம்.
மேலும் படிக்க : சைக்கிளை கண்டுபிடித்தது தமிழனா ? கல்வெட்டு ஆதாரம் நம்பலாமா ?
1,300 ஆண்டுகள் பழமையான உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் சைக்கிள் சிற்பம் இருப்பதாக பலமுறை வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள். சைக்கிள் சிற்பம் 1920களில் நகரத்தாரால் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற போது செதுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் உள்ள மிதிவண்டி சிற்பமா ?
அதேபோல் பிற நாட்டில் செதுக்கப்பட்ட சைக்கிள் சிற்பத்தை உறையூர் கோவில் எனவும் தவறாக பரப்பினர். அவற்றின் தொடர்ச்சியாக மேலும் சில புகைப்படங்களை இணைத்து வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
யூடர்ன் குழுவினர் உறையூர் கோவிலுக்கு நேரில் சென்று அங்குள்ள சிற்பம் குறித்த தகவலை சேகரித்து முன்பே வீடியோ வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், 2000 ஆண்டுகள் பழமையான உறையூர் கோவிலில் சைக்கிள், விண்வெளி வீரர், செல்போன் சிற்பம் இருப்பதாக பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானவை. சைக்கிள் சிற்பம் நகரத்தாரால் 1920களில் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் செதுக்கப்பட்டது. விண்வெளி வீரர், செல்போன் சிற்பம் 1990களில் பிற நாட்டில் செதுக்கப்பட்டவை என அறிய முடிகிறது.