தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதா ? உள்ளாட்சித் தேர்தலின் உண்மை ரிப்போர்ட் !

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வெளியாகி தேர்தல் பரபரப்பு ஓய்ந்துள்ளது. எனினும், எந்த கட்சி எவ்வளவு சதவீதம் வாக்கு வாங்கியது, யார் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்கிற மோதல் சமூக வளைதளங்களில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்த வாக்குகளில் தமிழ்நாடு பாஜக 5.33% வாக்குகளை பெற்றுள்ளதாக தமிழக பாஜகவின் சூர்யா, காயத்ரி ரகுராமன் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில், தமிழக பாஜக 3% வாக்குகளை வாங்கியதாக U2Brutus பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. மேலும், தமிழக பாஜக பெற்றது 3 சதவீதம் கூட இல்லை, 2 சதவீதம் என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 2022-ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக சார்பில் மாநகராட்சி வார்டு உறுப்பினராக 22 (மொத்த எண்ணிக்கை : 1374 ), நகராட்சி வார்டு உறுப்பினராக 56 (மொத்த எண்ணிக்கை : 3843 ) , பேரூராட்சி வார்டு உறுப்பினராக 230 (மொத்த எண்ணிக்கை : 7621 ) பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.
2022-ல் தமிழ்நாடு மாநகராட்சி வார்டு உறுப்பினர்களில் 1.60%, நகராட்சி வார்டு உறுப்பினர்களில் 1.46% , பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் 3.02% பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என மொத்தமுள்ள 12,838 வார்டுகளில் 308 வார்டு உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. இது 2.39 சதவீதமாகும் !
பாஜக வெற்றிப் பெற்ற 230 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் 168 பேர்(73%) கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வென்றுள்ளனர். அதேபோல், 56 நகராட்சி வார்டு உறுப்பினர்களில் 21 பேர் (37.5%) மற்றும் 22 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களில் 11 பேர் (50%) கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 200 வார்டுகள் (64.9%) கன்னியாகுமரி எனும் ஒரு மாவட்டத்தைச் சார்ந்தே இருக்கிறது.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக 2011-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இனையதளத்தில் வெளியிட்ட தரவுகளின் படி, ” மொத்தமுள்ள 12,816 வார்டுகளில்(தலைவர்கள் & ஊராட்சித் தவிர்த்து) மாநகராட்சி 04 , நகராட்சி 37 மற்றும் பேரூராட்சி 185 என மொத்தம் 226 வார்டு உறுப்பினர்களை பாஜக பெற்றிருந்தனர். இது 1.76 சதவீதமாகும் !
2011 மற்றும் 2022 ஆகிய இரு தேர்தல்களிலும் தமிழக பாஜக தனித்து நின்றே தேர்தலை சந்தித்து இருக்கிறது. இரு தேர்தல் வெற்றி சதவீதத்தை ஒப்பிடுகையில், 1.76%-ல் இருந்து 2.39% என பாஜக 0.63% மட்டுமே வளர்ச்சியை கண்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இவ்விரண்டு தரவுகளுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கைக்கும், வெற்றிப் பெற்றவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள சதவீதம் மட்டுமே. உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியாகவில்லை.
இதுகுறித்து இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்த சங்கர் அவர்களிடம் பேசுகையில், ” தற்போது வெளியான தரவுகள் கட்சி வாரியாக வார்டுகளில் வெற்றிப் பெற்றவர்களின் சதவீதம் தான். உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சிகள் வாரியாக பெற்ற மொத்த வாக்குகள் மற்றும் சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடுவதில்லை. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் வெளியிடவில்லை. ஆகவே, 2011 மற்றும் 2022 ஆண்டு தேர்தல்களில் வெற்றிப் பெற்றவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்த சதவீதமே ஒப்பிடப்படுகிறது. இல்லையென்றால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தான் கட்சி வாரியாக வாக்கு சதவீதத்தை கேட்டு வாங்க வேண்டி இருக்கும் ” எனத் தெரிவித்து இருந்தார்.
தோராயமாக 13 ஆயிரம் வார்டுகளில் பதிவான மொத்த வாக்குகளில் கட்சி வாரியாக பிரிப்பது சற்று சிரமமான காரியமே. மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கட்சி வாரியாக வாக்கு சதவீதமும் வெளியாகவில்லை. ஆனால், பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3 சதவீதம் வாக்கு வாங்கியது, 5.33 சதவீதம் வாக்கு வாங்கியது என எந்த தரவுளின் அடிப்படையில் தெரிவித்து வருகிறார்கள் எனத் தெரியவில்லை.