கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவில் குடியேறத் தடை.. பாஜகவின் சவுதாமணி பரப்பும் தவறான தகவல் !

பரவிய செய்தி

எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

உலகின் எந்த ஒரு நாட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு அமெரிக்காவில் குடியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தந்தி டிவியின் செய்தி ஒன்றினை பாஜக-வின் மாநில செயற்குழு உறுப்பினர் சௌதா மணி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பாஜகவினர், மோடியை அமெரிக்காவில் நுழையக்கூடாது என கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து போராட்டம் நடத்தினர். அதன் பலனாக இன்று ஒரு கம்யூனிஸ்ட் கூட அமெரிக்காவில் நுழையக் கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

உண்மை என்ன ?

தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் அதன் ஊடக பிரிவு செயலாளர் சௌதா மணி பதிவிட்ட தந்தி செய்தி குறித்து தேடினோம். “கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குடியேறத் தடை – அமெரிக்க அரசு அதிரடி” என்ற தலைப்பில் 2020, அக்டோபர் 4ம் தேதி வீடியோ ஒன்று தந்தி டிவி சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

Video Link 

அந்த வீடியோவில், “உலகின் எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் சர்வாதிகார நாட்டை சார்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்குத் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற்ற உரிமையைக் கோர முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குடியேறத் தடை என வெளியான செய்திகள் குறித்து 2020, அக்டோபர் 6ம் தேதி நேபாளத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஒரு சில செய்திகள் அமெரிக்க விசாக்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவிற்குக் குடியேறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லது சர்வாதிகார ஆட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்பான எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்பதற்காகவே அவர்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை விதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு விசாவிற்கும் அதன் தனிப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுகிறது.

அமெரிக்க அரசு குடியேற்ற மற்றும் குடியுரிமை சட்டத்தினை (INA) 1952ம் ஆண்டு நிறைவேற்றியது. அந்த சட்டத்தில் புதியதாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சியில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு அமெரிக்காவில் குடியேறத் தடை விதிக்கப்பட்டது. 

ஆனால், அச்சட்டத்தில் பல விதிவிலக்குகள் உள்ளன. கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சியின் உறுப்பினராக இருப்பினும் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்குக் குடியேற அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டம் அமெரிக்காவிற்குத் தற்காலிகமாக வருவதற்கான விசா (non-immigrant visa) பெறுபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய விதிமுறைகள் இந்தியாவிற்குப் பொருந்தாது என The Tribune இணையதளம் 2020 அக்டோபர் 5ம் தேதி செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவில் குடியேறத் தடை என பாஜகவினர் பரப்பும் செய்தி 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது என தெரிய வருகிறது. அப்படி வெளியான செய்திகளிலும் பல தவறான தகவல்கள் உள்ளதாக நேபாளத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு கருதி கம்யூனிஸ்ட் மட்டுமின்றி சர்வாதிகார கட்சி மற்றும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமெரிக்காவில் குடியேற உரிமை அளிக்கப்படுவதில்லை. ஆனால், அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. குடியேற உரிமை கோருபவரின் செயல்பாடு மற்றும் தேவை கருதி அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவிற்கு இந்த விதிகள் பொருந்தாது என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader