அமெரிக்காவில் ரம்ஜான் தொழுகையை இந்து பெண் தடுக்க முயன்றதாகப் பரப்பப்படும் தவறான தகவல் !

பரவிய செய்தி
ரம்ஜான் தொழுகையின் போது கலாட்டா செய்த பெண் சங்கி! அலேக்காக தூக்கிய போலீஸ்!
Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் திருநாள் ஏப்ரல் 22ம் தேதி உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியில் உள்ள மசூதியில் நடைபெற்ற ஈகைப் பெருநாள் தொழுகையை இந்து பெண் ஒருவர் தடுத்து நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்டதாக 50 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வைரல் செய்யப்படும் வீடியோவில், தொழுகை நடைபெறும் இடத்தில் புடவை அணிந்த பெண் ஒருவர் கலாட்டா செய்யவே அங்குள்ள காவலர்கள் அப்பெண்ணை வெளியே இழுத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
உண்மை என்ன ?
வெர்ஜினியா மசூதியில் சலசலப்பை ஏற்படுத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண் குறித்து தேடுகையில், அப்பெண் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல, இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிந்தது.
ஏப்ரல் 22ம் தேதி வெர்ஜினியாவைச் சேர்ந்த “All Dulles Area Muslim Society (ADAMS)” எனும் முகநூல் பக்கத்தில் வைரலான வீடியோ குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஏப்ரல் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெர்ஜினியாவின் ADAMS ஸ்டேர்லிங் ஈகை பெருநாள் தொழுகையின் போது மசூதியில் நடந்த சம்பவம், மனநலப் பிரச்சனைக் கொண்ட பெண்ணால் நிகழ்ந்தது. அவர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த நபர் என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம் ” எனத் தெரிவித்து உள்ளனர்.
மேலும், தொழுகையின் போது நடந்த சம்பவத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டதாகவும், அந்த வீடியோ கூடுதல் மனஅழுத்தம் தருவதால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களை அகற்றுமாறு குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
வைரல் செய்யப்படும் வீடியோவில் அப்பெண் நிற்கும் இடம், ADAMS உடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.
மேலும் படிக்க : சவுதி அரேபியா அரசு மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை வைக்க தடை செய்ததாகப் பரவும் பொய் !
மேலும் படிக்க : 62 வயது இந்து பண்டித் தனது சொந்த மகளைத் திருமணம் செய்ததாகப் பரப்பப்படும் வதந்தி !
இதற்கு முன்பாக, மதம் சார்ந்து பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் தொடர்பான கட்டுரைகளையும் யூடர்ன் வெளியிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள மசூதியில் நடைபெற்ற ரம்ஜான் தொழுகையை இந்து பெண் தடுத்ததாகப் பரப்பப்படும் வீடியோவில் இருப்பது இந்து பெண் அல்ல, அப்பெண் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்தவரே. அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அப்பெண்ணின் குடும்பத்தினர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதாகவும் மசூதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என்பதை அறிய முடிகிறது.