This article is from May 17, 2020

சீனாவில் பயன்படுத்திய மாஸ்க்குகள் இந்தியாவில் மறுவிற்பனைக்கு தயாராகிறதா ?

பரவிய செய்தி

சீனாவில் இருந்து பயன்படுத்திய மாஸ்க்கள் கல்கத்தாவிற்கு வந்தது.. இந்திய சந்தையில் விற்க தற்போது சுத்தம் செய்து பேக்கிங் செய்யப்படுகிறது.

Facebook link | archive link

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாகிய பிறகு பல நாடுகளில் மாஸ்க்குகளின் தேவை அதிகரித்தது. இந்தியாவிலும் கூட மாஸ்க் தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கே N95 மாஸ்க் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றது.

Youtube link | archive link 

இந்நிலையில், சீனாவில் பயன்படுத்திய மாஸ்க்குகளை கல்கத்தாவிற்கு கொண்டு வந்து சுத்தம் செய்து அதை இந்திய சந்தையில் விற்பனை செய்வதாக ஓர் வீடியோ வைரலாகி வருகிறது. குடோன் போன்ற இடத்தில் மூட்டைகள் முழுவதும் பல வகையான மாஸ்க்குகள் இருக்க அமர்ந்து இருப்பவர்கள் அதை சுத்தம் செய்து பேக்கிங் செய்யும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு பாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது. இந்த வீடியோ மார்ச் 10-ம் தேதி தமிழில் PINK TECH எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருந்தது.

வைரலாகும் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அவ்வீடியோவை பதிவிட்ட சமூக வலைதள பதிவுகள் சில கிடைத்தன. அதில், குஜராத், மும்பை என வெவ்வேறு பகுதிகளை குறிப்பிட்டு இருந்தார்கள்.

வீடியோவில் அந்த நபர் பிற மொழியில் பேசுவதை அறிய முடிந்தது. இந்தி தெரிந்த யூடர்ன் குழுவினர் மூலம் கேட்டறிந்த பொழுது, அவர் குஜராத்தி மொழியில் பேசுவதாக கூறி இருந்தார்.

” வீடியோவில் பேசும் நபர்  தங்களிடம் உள்ள லைவ் ஸ்டாக் பற்றி காண்பித்து பேசியுள்ளார். மேலும் அவர் 2020 பிப்ரவரி 22-ம் தேதியை குறிப்பிட்டு, மொத்தம் 5 லட்சம் N95 மாஸ்க்குகான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்ததாக, தங்களிடம் உள்ள வெவ்வேறு வகையான மாஸ்க்குகளை காண்பிக்கிறார். சாதாரண மாஸ்க்குகள் 3 லட்சம் உள்ளது எனக் கூறியதாக ” தெரிவித்தார்.

வீடியோவில் வேலை பார்க்கும் ஆட்கள் மாஸ்க் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு பேக்கிங் செய்வதற்காக N95 மாஸ்க்குகளை சுத்தம் செய்கிறார்கள். அந்த வீடியோவில் மூட்டை மூட்டையாய் மாஸ்க்குகள் இருப்பதால் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள் என எண்ணத் தோன்றி உள்ளது. இருப்பினும், இந்த மாஸ்க்குகள் மறுவிற்பனைக்கு வந்த பயன்படுத்தப்பட்டவை என்பதற்கு எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை.

இந்தியாவில் N95 மாஸ்க்குகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரும்பாலும், அயல்நாட்டில் அல்லது இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தே வாங்கப்படுகிறது. குறிப்பாக, வீடியோவில் ” Venus ” எனும் நிறுவனத்தின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. இந்த நிறுவனம் மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் அமைந்து உள்ளது.

ஆக, நீங்கள் பார்க்கும் வீடியோவில் இருக்கும் மாஸ்க்குகள் இறக்குமதி அல்லது எடுத்துச் செல்ல உள்ள N95 மாஸ்க்குகளின் ஸ்டாக் ஆக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அதில் உள்ள மாஸ்க்குகள் அனைத்தும் புதிதானவையாக இருக்கின்றன. புதிய மாஸ்க்குகளை பேக்கிங் செய்வதற்கு முன்பாக சுத்தம் செய்வது போன்று தெரிகிறது. அந்த வீடியோவில் பேசிய நபர் உரிமையாளராக இருக்காம். நெருக்கடி சமயத்தில் ஸ்டாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை வெளிப்படுத்தி உள்ளார். வீடியோவில் பேசும் நபர் பிப்ரவரி மாதத்தின் தேதியை குறிப்பிட்டு இருக்கிறார். அப்பொழுது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய தருணம். ஆகையால், ஸ்டாக்கை அதிகப்படுத்தி இருக்கலாம்.

நம் தேடலில், சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பயன்படுத்திய மாஸ்க்குகளை கல்கத்தாவில் சுத்தம் செய்து இந்தியாவில் விற்பனை செய்வதாக பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோவை எடுப்பவர் பேசுவது குஜராத்தி மொழி. இந்த வீடியோவை வைத்து குறிப்பிடுவது போன்று பயன்படுத்திய மாஸ்க்குகளை மறுவிற்பனை செய்வதாக செய்தியோ அல்லது கைது நடவடிக்கை தொடர்பான செய்தியோ ஏதும் வெளியாகவில்லை. ஆதாரமற்ற தகவல்களை பகிர வேண்டாம்.

Please complete the required fields.




Back to top button
loader