உத்தரப் பிரதேசத்தில் தந்தை, மகனை பாஜகவினர் சுட்டுக் கொன்றதாக பழைய செய்தியை பரப்பும் திமுகவினர் !

பரவிய செய்தி

உத்தரப் பிரதேசத்தில் பாஜக அட்டூழியம் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தந்தை மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பாஜகவினர்.

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தந்தை, மகனை பாஜகவினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கலைஞர் சேனலில் வெளியான செய்தி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 Archive link 

கலைஞர் செய்தியில், ” உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமாஜ்வாதி கட்சி பிரமுகர் சோட்டலால் திவாகர், அவரது மகன் சுனில் ஆகியோர் நடைபெற்று வரும் சாலை பணியை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது வயல் பகுதி சாலையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த இருவர் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும் அவரது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ” எனக் கூறப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ?  

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தேடுகையில், ” அச்சம்பவம் கடந்த 2020 மே மாதம் நிகழ்ந்தது ” எனத் தெரிய வந்தது.

கடந்த 2020 மே மாதம் 19-ம் தேதி வெளியான ஆங்கில ஊடக செய்திகளில், உத்தரப் பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் சாம்சோய் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட தகராறில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் சோட்டலால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனிலை சுட்டுக் கொன்ற ஜிதேந்திரா மற்றும் சர்வேந்திரா சர்மா ஆகியோரை காவல்துறை கைது செய்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ராமேந்திரா, உபேந்திரா, கியாந்தேந்திரா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

திவாகரின் மனைவி அக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார். இதற்கு முன்பாக பஞ்சாயத்து தலைவராக இருந்த ராமேந்திரா சர்மாவிற்கும், திவாகர் குடும்பத்திற்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது ” என வெளியாகி இருக்கிறது.

எனினும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை சுட்டுக் கொலை செய்தவர்கள் பாஜகவினரா அல்லது எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என செய்திகளில் நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை.

Twitter link  

ஆனால், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சமாஜ்வாதி கட்சி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆளும் பாஜகவின் ஆதரவைப் பெற்ற குண்டர்கள் என குற்றம்சாட்டியது. இதற்கு ஆளும் பாஜக அரசே பொறுப்பு எனத் தெரிவித்து இருந்தனர்.

முடிவு :

நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தந்தை, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் கடந்த 2020 மே மாதம் நிகழ்ந்துள்ளது. அன்றே, படுகொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், படுகொலை செய்தவர்கள் பாஜவைச் சேர்ந்தவர்கள் என செய்திகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆளும் பாஜக அரசின் ஆதரவைப் பெற்றவர்கள் என சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது அறிய முடிகிறது.

அப்டேட் :

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவத்தின் பழைய செய்தியை திமுகவினர் பரப்பி வருவதாக குறிப்பிட்டு இருந்தோம்.. நமது கட்டுரையில் U2Brutus-ஐ திமுக எனக் குறிப்பிட்டதாக அவர் ட்வீட் செய்து உள்ளார்.  ஆனால், அவரை திமுக என நேரடியாக குறிப்பிடவில்லை. பழைய செய்தியை திமுகவினர் பலரும் பரப்பியதால் U2Brutus போன்றவர்களும் பதிவிட்டு உள்ளனர்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader