உத்திரப் பிரதேசத்தில் 101 அடி உயர காமராஜர் சிலையை யோகி ஆதித்யநாத் திறப்பதாகப் பரவும் வதந்தி!

பரவிய செய்தி
நாளை உபி யில் யோகி ஜி அரசால் திறக்க பட உள்ள 101 அடி காமராஜர் சிலை… இது வரை 200 கும் அதிகமான காமராஜர் சிலைகளை நம் பாரத பிரதமர் மோடி ஜி அரசு திறந்து வைத்துள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். அவர் அம்மாநிலத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு 101 அடி உயரத்தில் சிலையை நாளை திறந்து வைக்க உள்ளார் என்றும், இது வரையில் இந்தியாவில் 200-கும் அதிகமான காமராஜர் சிலைகளைப் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளர் என்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
நாளை உபி யில் யோகி ஜி அரசால் திறக்க பட உள்ள 101 அடி காமராஜர் சிலை… இது வரை 200 கும் அதிகமான காமராஜர் சிலைகளை நம் பாரத பிரதமர் மோடி ஜி அரசு திறந்து வைத்துள்ளது.👍 pic.twitter.com/mBU019fhLc
— அரசியல் கழுகு 🇮🇳 (@Arasiyalkaluku) December 15, 2022
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரப்பக்கூடிய பதிவுகளில் காமராஜர் சிலை ‘நாளை’ திறக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த தேதி எனக் குறிப்பிடப்படவில்லை. அதே போல் உத்திரப் பிரதேச மாநிலத்தில் எந்த இடத்தில் 101 அடி காமராஜர் சிலை அமைந்துள்ளது என்பது பற்றி எந்த வித தகவலும் இல்லை.
இது குறித்து யோகி ஆதித்யநாத்தின் சமூக வலைத்தளங்களிலும், இணையத்திலும் தேடினோம். அப்படி எந்தவொரு பதிவும், செய்தியும் கிடைக்கவில்லை.
உத்திரப் பிரதேசத்தில் திறக்கப்பட உள்ளதாகப் பகிரப்படும் காமராஜர் சிலையைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடினோம். Flickr எனும் சமூக வலைத்தளத்தில் அப்புகைப்படத்தினை காண முடிந்தது. 2009, ஆகஸ்ட் 2ம் தேதி ரமேஷ் நாயர் என்பவர் அப்புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ‘மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை’ என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் எந்த கேமராவில் எடுக்கப்பட்டது, என்ன லென்ஸ் பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களும் அப்பக்கத்தில் காண முடிகிறது.
இதே புகைப்படத்தினை பிளாக் அண்ட் வைட் படமாகவும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும், அவரது Flickr பக்கத்தில் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, மகாத்மா காந்தியின் சிலை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைகளையும் பதிவிட்டுள்ளார். இவை மட்டுமின்றி சென்னையில் உள்ள பல பகுதிகளின் புகைப்படங்களையும் அவரது Flickr பக்கத்தில் காண முடிகிறது.
கூகுள் மேப்பில் மெரினாவில் உள்ள காமராஜர் சிலையினை Street view மூலம் பார்த்ததில் அதனை உறுதி செய்ய முடிகிறது.
அடுத்ததாக, இதுவரையில் 200க்கும் அதிகமான காமராஜர் சிலைகளை மோடி திறந்து வைத்ததாகப் பரப்பப்படும் தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். மோடி காமராஜர் சிலையை திறந்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. இவற்றிலிருந்து இது ஒரு தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.
பிரதமர் மோடி 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி குஜராத் மாநிலத்தில் 3,000 கோடி ரூபாய் செலவில் 182 மீட்டர் (600 அடி) உயரம் கொண்ட வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார்.
இதே போல் மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு 3,600 கோடி ரூபாய் செலவில் 210 மீட்டர் உயரத்தில் சிலை நிறுவ 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு உத்திரப் பிரதேசத்தில் நாளை 101 அடி உயரச் சிலையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.