This article is from Apr 08, 2021

உத்தரப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் புகைப்படமா ?

பரவிய செய்தி

உபி மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் !

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

”  கேரளா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், பிஜேபி ஆள வேண்டும் – யோகி ஆதித்ய நாத் (படத்தில்: உபி மாநிலத்தில் உள்ள டிரான்ஸ் ஃபார்மர்) ” எனும் நிலைத்தகவல் உடன் மரக்கட்டைகளால் முட்டுக் கொடுத்து வைக்கப்பட்ட சிறிய டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இப்பதிவு 13 ஆயிரத்திற்கும் மேல் பகிரப்பட்டு உள்ளது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர் இருக்கும் படத்தில் பிற மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி என விமர்சித்து பரப்பப்படும் டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இதே புகைப்படத்தை குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தது எனக் கூறி பகிர்ந்த பதிவுகளையும் காண முடிந்தது. ஏன், பாகிஸ்தான் எனக் கூறி 2020-ல் பகிர்ந்த முகநூல் பதிவும் கிடைத்தது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இருப்பதாகவும், பாகிஸ்தான் எனக் கூறி சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படம் எங்கு உள்ளது என்ற எந்த விவரத்துடனும் பகிரப்படுவதில்லை. இந்த டிரான்ஸ்ஃபார்மர் இந்தியாவில் இருக்கிறது என உறுதியாய் கூறுவதற்கு செய்தியோ, ஆதாரமோ கிடைக்கவில்லை.

புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து மேற்கொண்டு தேடுகையில், ” 2 ஆண்டுகளுக்கு முன்பாக pikabu.ru எனும் இணையதளத்தில் ரஷ்ய மொழியில் இடம்பெற்ற தகவலுடன் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதை மொழி மாற்றம் செய்து பார்க்கையில் தாகெஸ்தான் குடியரசு பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்ஃபார்மர் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

2018 செப்டம்பர் மாதம் துருக்கியைச் சேர்ந்த Hilvan Gölcük Village எனும் முகநூல் பக்கத்தில் இந்த டிரான்ஸ்ஃபார்மர் எங்கே இருக்கிறது என இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது.

அதேபோல், 2018 அக்டோபரில் iraqkhair எனும் இணையதளத்தில் அரபிக் மொழியில் ஈராக் நாட்டைக் குறிப்பிட்டு இப்புகைப்படம் பகிரப்பட்டு இருக்கிறது.

ஆனால், 2018 ஆகஸ்ட் 29-ம் தேதி 06452.com எனும் இணையதளத்தில், ” உக்ரைனின் லுஹான்ஸ்க் எரிசக்தி அமைப்பின் நிதி நெருக்கடி காரணமாக பிராந்தியத்தின் மின் அமைப்புகள் சீரழிந்து வருவதாகவும், Severodonetsk உள்ளிட்ட சில நகரங்களில் பெரிய அளவில் மின் சேவை தடைகள் ஏற்படுவதாக ” இப்புகைப்படத்துடன் கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், உபி மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் என பரப்பப்படும் புகைப்படம் தவறானது. இப்புகைப்படம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை. இதற்கு முன்பாக இதே புகைப்படத்தை குஜராத் உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் பலவற்றின் பெயருடன் பகிரப்பட்டு இருக்கிறது.

மேலும், இதே புகைப்படம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக உக்ரைன் நாட்டின் நகரங்களில் மின் சேவை பாதிப்பு குறித்து வெளியான செய்தி ஒன்றில் இடம்பெற்று இருக்கிறது. இப்புகைப்படம் ஈராக், பாகிஸ்தான், உக்ரைன் என பல நாடுகளில் சுற்றி வருவதால் இந்தியாவிற்குள் நுழைந்து இருக்கக்கூடும் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader