உத்தரகாண்ட் சாமியார் விடுதியில் பெண்களுடன் சிக்கியதாகப் பரவும் இலங்கை புத்த பிக்குவின் வீடியோ !

பரவிய செய்தி
உத்தரகண்ட் மாநிலம் தேவதை பூமி இங்கு முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் வாழக்கூடாது… இந்தியா இந்துநாடாக வேண்டும் என ஊடகங்களில் கூறிய மேற்கண்ட சங்கி சாமியார் இலங்கை சொகுசு விடுதியில் விபச்சார அழகிகளுடன் இருந்த போது சிக்கினான். இவனை போன்ற கயவர்களை நம்பும் அப்பாவிகளே இனியாவது உணருங்கள்
மதிப்பீடு
விளக்கம்
உத்தரகாண்ட் மாநிலம் என்பது தேவதை பூமி, இங்கு முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் வாழக்கூடாது என்று கூறிய சாமியாரான ‘சுவாமி ஆனந்த் ஸ்வரூப்’, இலங்கை சொகுசு விடுதியில் பெண்களுடன் இருக்கும் போது சிக்கிக் கொண்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் இரு பெண்களுடன் இருக்கும் துறவி உடை அணிந்த ஒரு நபரை, பல பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி வீடியோ எடுப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த வீடியோ ஃபேஸ்புக் பக்கங்களிலும் இதே செய்திகளுடன் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிந்தது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் இருப்பவர் உத்தரகாண்ட் சாமியார் அல்ல, இலங்கையைச் சேர்ந்த புத்த பிக்கு பல்லேகம சுமன தேரர் என்பதை பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் வீடியோக்கள் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.
இது குறித்து “etvbharat’ என்ற தமிழ் இணையதளத்தில் ஜூலை 9 அன்று செய்தி வெளியாகி உள்ளது. அதில் ”இலங்கையின் நவகமுக பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் புத்த பிக்கு பல்லேகம சுமன தேரர் இரு பெண்களுடன் இருந்த போது 8 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புத்த பிக்கு மற்றும் உடனிருந்த இரு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், 8 பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையின் ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் பல்லேகம சுமன தேரர் தொடர்பில் இருப்பதாக இருக்கிறது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரவி வரும் வீடியோவில் இருப்பவர் புத்த பிக்குவான பல்லேகம சுமன தேரர் தான் என்பது குறித்து, Test One என்ற சிங்கள யூடியூப் சேனலும் கடந்த ஜூலை 08 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் படிக்க: இலங்கையில் பெண்களுடன் சிக்கிய புத்த பிக்கு எம்.பி திருமாவளவன் உடன் இருப்பதாகப் பரவும் வதந்தி !
இதற்கு முன்பும், இலங்கையில் பெண்களுடன் சிக்கிய புத்த பிக்கு திருமாவளவனுடன் இருப்பதாக தவறாக செய்திகள் பரவின. இதன் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், உத்தரகாண்ட் சாமியார் ஒருவர் இலங்கையில் பெண்களுடன் சிக்கியதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், இந்த வீடியோவில் இருப்பவர் புத்த பிக்குவான பல்லேகம சுமன தேரர் என்பதையும் அறிய முடிகிறது.