This article is from Jul 27, 2019

பசு மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றும் – உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு !

பரவிய செய்தி

ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்து உள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

உத்தரகாண்ட் முதல்வர் பசுக்கள் ஆக்சிஜனை வெளியேற்றுவதாகவும், அம்மாநில எம்.பி ஒருவர் சிசேரியன் பிரசவத்தை தவிர்க்க கருட கங்கை நீரை அருந்த வேண்டும் என சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

விளக்கம்

த்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பசுவால் மட்டுமே ஆக்சிஜனை உள்ளிழுக்கவும், வெளியேற்றவும் முடியும் என பேசிய வீடியோ நாடெங்கிலும் சமூக வலைதளங்களில், செய்திகளில் வைரலாகி வருகிறது.

அவர் பேசுகையில், ” பசுவின் பால், சிறுநீர் மருத்துவ குணங்கள் கொண்டவை. பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து மட்டுமின்றி அதனை வெளியேற்றவும் செய்கிறது. ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே. பசு மாட்டிற்கு மஜாஜ் செய்வதால் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து குணமடைய முடியும். பசுக்களுடன் நெருக்கமாக வாழ்வது காசநோயை குணப்படுத்தும் ” எனத் தெரிவித்து இருந்தார் .

2017-ல் ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவனானி என்பவரும் இதே கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

உத்தரகாண்ட் முதல்வரின் கருத்து குறித்து முதல்வர் அலுவலக அதிகாரி கூறுகையில், ” பசுவின் பால் மற்றும் சிறுநீர் மருத்துவ குணம் கொண்டது என்பது நன்றாக தெரியும். உத்தரகாண்டில் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பசுக்கள் ஆக்சிஜனை வெளியேற்றுவதாக நம்புகின்றனர். அதையே முதல்வரும் தெரிவித்து இருக்கிறார் ” எனக் கூறியுள்ளார்.

பசுவின் சிறுநீர் மருத்துவ குணம் கொண்டது என நீண்டகாலமாக நம்பப்படுகிறது. அதேபோன்று, பசுக்கள் ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளியேற்றுகிறது என்றும் மக்கள் நம்பி வருகின்றனர். அவ்வப்போது, அரசியல் தலைவர்களும் நம்பிக்கையை வலுப்பெறச் செய்யும் விதத்தில் சர்ச்சையான கருத்தை கூறி விடுகின்றனர்.

பசு ஆக்சிஜனை வெளியேற்றுமா ?

தாவரங்களை தவிர எந்தவொரு விலங்குகளாலும் ஆக்ஸிஜனை வெளியிட முடியாது. உள்ளிழுக்கும் காற்றில் பயன்படாத ஆக்ஸிஜன் மட்டுமே வெளியிட முடியும். விலங்குகளின் நுரையீரல் அமைப்பிற்கு உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை முழுவதுமாக வெளியேற்றக்கூடிய திறன் இல்லை.

மேலும் படிக்க : பசுவிற்கு விஷம் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா ?

சுகப்பிரசவம் பெற கருட கங்கை நீரை பருகுங்கள் :

உத்தரகாண்ட் முதல்வரின் பசு குறித்த பேச்சிற்கு முன்பு அம்மாநில பிஜேபி தலைவரும், நைனிடால் தொகுதி எம்பியுமான அஜய் பாட், கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் சிசேரியன் செய்வதை தவிர்க்க கருட கங்கா நதியில்(பாகேஸ்வர் மாவட்டத்தில் ஓடும் நதி) இருந்து நீரை அருந்த வேண்டும். கருட கங்கை நதியில் இருக்கும் கற்களை கொண்டு வந்து நீரில் கலந்து நோயாளிகள் குடிக்க வேண்டும். இதன் மூலம் சிசேரியன் பிரசவங்கள் இருக்காது ” எனத் தெரிவித்து இருந்தார்.

நாடெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்கள் சர்ச்சையான கருத்துக்களை கூறிவிடுகின்றனர். ஆனால், அதில் இருக்கும் உண்மையற்ற தகவல்களை சிலர் நம்பவும் செய்கிறார்கள். இது தவறான நம்பிக்கையை விதைக்க வழிவகை செய்யும் என்பதை பலரும் அறியவில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader