உத்தரப் பிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வு எழுத கூட்டமாய் ரயிலில் சென்ற காட்சியா ?

பரவிய செய்தி

பிஜேபி அரசின் கண்டுபிடிப்பு நவீன ரயில் Indoor AC Outdoor AC தேசிய மாடல்

மதிப்பீடு

விளக்கம்

உத்திர பிரதேச மாநிலத்தில் அரசு வேலைக்காக நடத்தப்பட்ட தேர்வு ஒன்றிற்கு இளைஞர்கள் ரயிலின் கூரை மீது அமர்ந்து செல்வதாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பகிர்ந்து 37 லட்சம் பேர் வேலையில்லாமல் இருந்தால் இது தான் நிலைமை என விமர்சித்து வருகின்றனர்.

Twitter link | Archive link

உண்மை என்ன ?

2022 அக்டோபர் 16ம் தேதி உத்திர பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் நிலை தேர்வு எழுத வருபவர்கள் ரயிலின் கூரை மீது அமர்ந்து பயணித்ததில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர் எனச் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோவின் கீஃப்ரேம்களை எடுத்து வைத்து ரிவேர்ஸ் சேர்ச் செய்ததில், New TR News Agency எனும் முகநூல் பக்கத்தில் 2021ம் ஆண்டுச் செப்டம்பர் 5ம் தேதி வைரலான வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

Facebook Link 

மேலும் தேடியதில் Beautiful Places To See எனும் யூடுயூப் பக்கத்தில் 2018ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி ” வங்கதேசத்தில் ஈத் விழாவுக்கான சிறப்பு ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது(Most Packed Eid Festival Special Train of Bangladesh Railway)” எனும் தலைப்பில் வைரலான வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்தது.

இருப்பினும், உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடத்தப்பட்ட அரசு பணியாளர் தேர்வுக்குச் சென்ற மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானது உண்மையே. ரயிலில் இடம் கிடைக்காமல் தேர்வு எழுத சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தித்தளம் அக்டோபர் 16ம் தேதி ட்விட்டரில், “முதலமைச்சரின் பேரணிக்காக ரயில்கள் புக் செய்யப்படுகிறது. ஆனால் எங்களைப்போன்று தேர்வு எழுதுபவர்களுக்கு ரயில்கள் விடுவதில்லை” எனத் தேர்வு எழுத சென்றவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் எனப் பதிவிட்டு உள்ளது.

இதிலிருந்து, உத்திர பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுத சென்றவர்கள் ரயிலில் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டது உண்மை என்றாலும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ உத்திர பிரதேசத்தில் எடுக்கப்பட்டது இல்லை எனத் தெரியவருகிறது.

முடிவு :

நம் தேடலில், உத்திர பிரதேச மாநிலத்தில் அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கு ரயிலின் கூரை மீது அமர்ந்து தேர்வு எழுத சென்றார்கள் எனப் பரப்பப்படும் வீடியோ பங்களாதேஷ் நாட்டில் எடுக்கப்பட்டது எனத் தெரியவருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader