உத்திர பிரதேச அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு எனப் பரப்பப்படும் பொய்

பரவிய செய்தி

உத்திர பிரதேச அரசு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு. இதே டெல்லியில் வழங்கப்பட்டு இருப்பின் சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகி இருக்கும்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாஜகவை சேர்ந்த அர்ஜுன் யாதவ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவர் சாத்வி பிராச்சி ஆகியோர் தங்களின் சமூக ஊடக கணக்குகளில், பல்வேறு உணவு பொருட்களை தட்டில் வைத்திருக்கும் ஒரு சிறுவனின் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளனர். 

சிறுவன் வைத்துள்ள உணவு தட்டில் ரொட்டி, பன்னீர், ஆப்பிள், வெள்ளரிக்காய், ஐஸ் கிரீம், ஜூஸ் முதலியவை உள்ளன. இது உத்திர பிரதேச அரசு பள்ளியில் கொடுக்கப்படும் மதிய உணவு என்றும், இதே டெல்லியில் இப்படி நிகழ்ந்திருந்தால் சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாகி இருக்கும் என பதிவிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

உத்திர பிரதேச அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக் கூடிய மதிய உணவு திட்டத்திற்கான உணவு அட்டவணை என்ன என்பதினை அறிய முயற்சித்தோம். அதில், கீழ்காணும் அட்டவணை கிடைக்கப்பெற்றது.

பாஜககாரர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரும் புகைப்படத்தில் உள்ள  சிறுவனின் தட்டில் உள்ள உணவிற்கும், அரசின் வலைதளத்திலுள்ள உணவு அட்டவணைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை அறிய முடிகிறது. 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், அமித் என்பவர் ஆகஸ்ட் 31, 2022 அன்று இந்த புகைப்படத்தினை தனது முகநூலில் பகிர்ந்திருப்பது கண்டறிய முடிந்தது. இவர் உத்திர பிரதேசத்தில், ஜலாவுன் மாவட்டத்திலுள்ள மாலக்பூர் என்ற கிராமத் தலைவராவார்.

Facebook link  

பள்ளி மாணவர்களுக்கு உத்திர பிரதேச அரசு மதிய உணவு வழங்குகிறது. அம்மாநிலத்தில் அரசு வழங்கக்கூடிய உணவு திட்டத்துடன் கூடுதலான உணவு பொருட்களை தனிநபர்களும் வழங்க வழிவகையுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாணவர்களுக்கு கூடுதல் உணவு பொருட்களை வழங்கலாம். இதன் மூலம் அமித் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் “தித்தி போஜன்” திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளனர். புகைப்படத்தில் உள்ள சிறுவனிடமுள்ள உணவு இத்திட்டத்தின் மூலமே வழங்கப்பட்டுள்ளது.

அமித் கடந்த ஆகஸ்ட், 31ம் தேதி பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் பள்ளி குழந்தைகள் ஒரு பதாகையை ஏந்திய வண்ணம் உள்ளனர். அதில் “சௌரப்” என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும், உணவு வழங்கியதற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது முகநூல் பதிவுகளை பார்க்கும்போது, இம்மாதிரியான உணவுகளை அவர் தொடர்ந்து  மாணவர்களுக்கு வழங்குவதும், அவ்வுணவை வழங்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுமான பதிவுகளை பார்க்க முடிகிறது. 

புகைப்படத்தில் காணப்படுவது போல் இந்த கூடுதல் உணவு வழங்கும் நிகழ்வு மாலக்பூரிலுள்ள ஒரு பள்ளியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த உணவு ஒட்டுமொத்த உத்திர பிரதேச மாநில பள்ளிகளிலும் வழங்கப்படுவது அல்ல. 

எனவே, மதிய உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உணவுகளை உத்திர பிரதேச அரசு வழங்கவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், இம்மாநிலத்தில் மதிய உணவின் தரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன. ரொட்டியுடன் வெறும் உப்பு மட்டுமே பரிமாறிய நிகழ்வுகளும் பலமுறை நடந்தேறியுள்ளன. 

முடிவு :

நம் தேடலில், பாஜகவினர் பகிரும் மதிய உணவு குறித்தான புகைப்படம் உத்திர பிரதேச அரசால் வழங்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிகிறது. “தித்தி போஜன்” திட்டத்தின் மூலம் தன்னார்வளர்கள் மற்றும் தனி நபர்கள் பங்களிப்பில் அமித் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் வழங்கப்பட்டது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader