உத்தரப் பிரதேசத்தில் உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் எனப் பரவும் நையாண்டிப் பதிவு !

பரவிய செய்தி
உலகின் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 916 சதுர மைல்கள் பரப்பளவில் அமைய இருக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்திக்கும், மதுராவுக்கும் நடுவே 916 சதுர மைல்கள் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் 1000 சரக்கு விமானங்கள் மற்றும், 2000 பயணிகள் விமானங்களை நிறுத்த முடியும்.
மேலும் 10,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கக்கூடிய வகையில் நூலகம், உருத்திராட்சம், காவி உடைகள் போன்ற மங்கலப் பொருட்களை விற்க 400 கடைகள் என மேலும் பல அம்சங்களுடன் இந்த சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் இப்பதிவு பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்திக்கும், மதுராவுக்கும் நடுவே அமைய உள்ளதாகப் பரவும் செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை.
மேற்கொண்டு பரவக் கூடிய பதிவுகளில் உள்ள புகைப்படங்களைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடினோம். முதலில் உள்ள புகைப்படம் சவூதி அரேபியாவில் உள்ள ‘King Fahd International Airport’ என்பதை அறிய முடிந்தது. அந்த விமான நிலையத்தின் வேறு சில புகைப்படங்கள் இணையத்தில் உள்ளது.
இரண்டாவதாக உள்ள புகைப்படம் சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள ‘Beijing Daxing International Airport’. இந்த விமான நிலையத்தின் புகைப்படங்களும் இணையத்தில் உள்ளது. மேலும் பரவக் கூடிய படத்திலேயே சீன நாட்டு கொடியும் இருப்பதை காண முடிகிறது.
பரவக் கூடிய தகவலில், விமான ஓடு பாதை கடவுளாகக் கருதப்படும் ராமர் மற்றும் கிருஷ்ணரைக் குறிப்பிடும் வகையில் மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் அமைக்கப்பட உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் விமான நிலைய ஓடு பாதைகளை ஏரியல் வியூவில் பார்த்தால் இராமர் வனவாசம் சென்ற வழித்தடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இவை இரண்டுமே விமான ஓடு பாதை அமைப்பதற்கான சரியான முறைகள் அல்ல.
மேலும், இந்த விமானநிலையம் திறக்கப்பட்டால் ஒரு மணிநேரத்தில் 50 டிரில்லியன் டாலர் பி.எம் கேரில் வந்து சேர்ந்துவிடும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. பி.எம். கேர் நிதிக்கும், விமான நிலையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது நையாண்டிப் பதிவாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்துத் தொடர்ந்து தேடியதில், நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம் இத்தகவலை முதலில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பதைக் காண முடிந்தது. அவர் இதற்கு முன்னர் சோழ இளவரசி குந்தவையின் புகைப்படம் என நையாண்டியாகப் பதிவிட்டிருந்தார். அதனை உண்மை எனப் பலரும் பரப்பினர். இவ்வாறு பல பதிவுகளை அவரது பேஸ்புக் பக்கத்தில் காண முடிகிறது. இப்படித்தான் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் என இதனையும் நையாண்டியாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க : சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் எனப் பரவும் நையாண்டிப் பதிவு !
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உலகில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வருவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. நையாண்டிப் பதிவினை பலரும் உண்மை எனப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.