உத்தராஞ்சலில் மாணவர்களுக்கு காவி ஸ்கார்ப் அணிவித்து பட்டமளிப்பா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கருப்பு கோட் அணிவது வழக்கம். அத்தகைய, பிரிட்டிஷ் பாரம்பரிய முறையை ஒழித்து விட்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தராஞ்சல் பல்கலைக்கழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் காவி நிற ஸ்கார்ப் அணிவித்து பட்டம் வழங்கப்பட்டதாக மாணவ, மாணவியர்கள் காவி நிற ஸ்கார்ப் உடன் இருக்கும் செல்ஃபி புகைப்படம் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
மாணவர்கள் கருப்பு கோட் அணிவதற்கு பதிலாக காவி நிற ஸ்கார்ப் அணிந்து இருப்பதாக சிலர் பெருமையாக பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், இதேநிலை நாளை அண்ணா பல்கலைக்கழகத்திலும் வரலாம் என இதற்கு எதிரான பதிவுகளும் வெளியாகி வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
உத்தராஞ்சல் பல்கலைக்கழகத்தின் ட்விட்டர் பக்கத்தை ஆராய்கையில், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தராஞ்சல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
Grand Celebration of First Convocation Ceremony at Uttaranchal University 59 Gold Medals, 16 Doctorate (Ph.D.) and 2668 received Degrees.https://t.co/oHOnvUeLHR#UttaranchalUniversity #GrandCelebration #FirstConvocationCeremony #GoldMedals #Doctorate #Degrees pic.twitter.com/Vo29kN9ac7
— Uttaranchal University Dehradun Official (@UUDehradun) February 29, 2020
ட்விட்டரில் பதிவான புகைப்படத்தில், காவி நிற ஸ்கார்ப் மட்டுமின்றி பிற நிறத்தில் ஸ்கார்ப் மற்றும் கோட் அணிந்தவர்களையும் காண முடிகிறது. உத்தராஞ்சல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பட்டமளிப்பு விழாவின் புகைப்படத் தொகுப்புகள் வெளியாகி இருக்கிறது.
புகைப்படங்களில் காவி நிறம் மட்டும் அளிக்கப்படவில்லை, நீலம், பச்சை, மஞ்சள், மெரூன் உள்ளிட்ட பல வண்ணங்களில் ஸ்கார்ப், கோட் அணிந்து இருப்பதை காணலாம்.
2018-ம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பட்டமளிப்பு விழாவின் போது பிரிட்டிஷ் முறையிலான கோட் அணிவதற்கு பதிலாக இந்திய முறையில் உடை அணிவது தொடர்பாக மாணவர்களுக்கு எடுத்துரைக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களும் தெரிவித்து இருந்தார்.
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவின் போது கருப்பு கோட் மற்றும் தொப்பி அணியும் வழக்கத்தை பாஜக அரசாங்கம் வருவதற்கு முன்பாகவே மாற்றி இந்திய பாரம்பரிய முறையில் உடை அணிந்து பட்டம் பெற்றும் இருக்கிறார்கள்.
2013-ம் ஆண்டு ஐஐடி வாரணாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் இந்திய பாரம்பரிய முறையில் கலந்து கொண்டு பட்டம் பெற்றனர். தற்போது பல பல்கலைக்கழகங்களில் இதே முறையை பின்பற்றி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், உத்தராஞ்சல் பல்கலைக்கழகத்தில் கருப்பு கோட் மற்றும் தொப்பி அணிவதற்கு பதிலாக மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் பல வண்ணங்களில் கோட், ஸ்கார்ப் அணிந்து இருக்கிறார்கள். காவி நிறத்தில் மட்டும் அல்ல.
ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நிறம் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் அந்த நிறத்தில் ஸ்கார்ப் அணிந்து இருக்கின்றனர். அதில், காவி நிறத்தில் இருக்கும் மாணவர்களின் புகைப்படத்தை மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் தவறாக வைரல் செய்து உள்ளனர் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.