This article is from May 26, 2021

தடுப்பூசி செலுத்தியவர்கள் 2 ஆண்டுகளில் இறந்து விடுவார்கள் என லூக் மான்டோக்னிர் கூறினாரா ?

பரவிய செய்தி

தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து மக்களும் 2 வருடங்களுக்குள் இறந்து விடுவார்கள் – லூக் மான்டோக்னிர்

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 தொடர்பாக எந்தவொரு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களும் உயிர் வாழ வாய்ப்பில்லை, அவர்கள் 2 வருடங்களில் இறந்து விடுவார்கள் என நோபல் பரிசு பெற்ற லூக் மான்டோக்னிர் தெரிவித்ததாக வாட்ஸ்அப் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதனுடன் அவர் கூறிய பல கருத்துக்களையும், lifesitenews உடைய கட்டுரை இணைப்பு மற்றும் மான்டோக்னிர் உடைய விக்கிபீடியா பக்கத்தின் இணைப்பும் பகிரப்பட்டு இருக்கிறது.

உண்மை என்ன ?

” எந்த நம்பிக்கையும் இல்லை, ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் இல்லை. உடல்களை எரிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் ” என்பது போன்ற கருத்துக்களை மான்டோக்னிர் கூறியதாக பரவும் வாட்ஸ் அப் செய்தியில் உள்ளவை கொடுக்கப்பட்டுள்ள lifesitenews கட்டுரையில் இடம்பெற்றவில்லை.

மே 18-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த என்ஜிஓ ரெய்ர் அறக்கட்டளை(Rair Foundation) நோபல் பரிசு பெற்ற வைராலஜிஸ்ட் லூக் மான்டோக்னிர் உடைய நேர்காணல் வீடியோ குறித்து வெளியிட்ட கட்டுரையை அடிப்படையாக வைத்தே லைஃப்சைன்ஸ் தளம் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது. ரெய்ர் அறக்கட்டளை கட்டுரையில் லூக் மான்டோக்னிர் பேசிய 2.34 நிமிட வீடியோ ஆங்கில மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 11 நிமிடம் கொண்ட நேர்காணல் வீடியோ planetes360 எனும் பிரெஞ்சு இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

வாட்ஸ் அப் செய்திகள் வைரலான பிறகு ரெய்ர் அறக்கட்டளை இணையதளம், ” தடுப்பூசி மக்களை 2 ஆண்டுகளில் கொன்று விடும் என லூக் மான்டோக்னிர் கூறவில்லை ” என மறுத்து கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

அசாம் மாநில காவல்துறையின் சமூக வலைதள பக்கங்களிலும், நோபல் பரிசு பெற்ற லூக் மான்டோக்னிர் கூறியதாக தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுவதாகப் பதிவிட்டு உள்ளனர்.

லூக் மான்டோக்னிர் :

லூக் மான்டோக்னிர் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கேள்விக்கு, ” இது ஒரு அறிவியல் பிழை மற்றும் மருத்துவ பிழை. இது ஏற்றுக் கொள்ள முடியாத தவறு. தடுப்பூசிகள் தான் உருமாறிய புதிய வைரசை உருவாக்குகின்றன ” எனும் கருத்தைத் தெரிவித்தார் ” என ரெய்ர் அறக்கட்டளை இணையதளம் வீடியோ உடன் கட்டுரை வெளியிட்டது. இது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், அதற்கான ஆய்வுகளையும், ஆராய்ச்சி தரவுகளையும் அவர் முன்வைக்கவில்லை, சமர்ப்பிக்கவும் இல்லை. தன்னுடைய கருத்தை முன்வைத்து இருக்கிறார்.

லூக் மான்டோக்னிர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது புதிதல்ல. கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்தார். இந்த கோட்பாடு தற்போதுவரை சரிபார்க்கப்படவில்லை என்றாலும், அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நோபல் பரிசு பெற்ற ஓராண்டில், ” எய்ட்ஸ் நோயில் இருந்து மக்களை பாதுகாக்க நல்ல நோயெதிர்ப்பு அமைப்பு போதுமானது ” எனத் தெரிவித்ததாக connexionfrance தளம் வெளியிட்டு இருக்கிறது. லூக் மான்டோக்னிர் பல ஆண்டுகளாக தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி, ஹோமியோபதி சார்புடையவர் என்றும், ” தண்ணீருக்கு நினைவுகள் உள்ளது ” என்றும் நம்புகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

முடிவு :

நம் தேடலில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்து விடுவார்கள் என நோபல் பரிசு பெற்ற வைராலஜிஸ்ட் லூக் மான்டோக்னிர் கூறவில்லை. பரவும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்தி வதந்தியே என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader