தடுப்பூசி செலுத்தியவருக்கு மயக்க மருந்து கொடுத்ததால் மரணம் என நாடு விட்டு நாடு பரவும் வதந்தி !

பரவிய செய்தி

【தடுப்பூசி எச்சரிக்கை】கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட எவரும் எந்த வகையான மயக்க மருந்துகளையும்,* உள்ளூர் மயக்க மருந்து அல்லது பல்மருத்துவரின் மயக்க மருந்துகளையும் கூட உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது தடுப்பூசி போடப்பட்ட நபரின் *உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மிகவும் ஆபத்தானது. இறப்பதற்கான வாய்ப்பு உள்ளது,,, எனவே, தடுப்பூசி போட்ட நபர் தடுப்பூசி போட்ட 4 வாரங்கள் வரை (கழித்து) காத்திருக்க வேண்டும். அவருக்கு எதிர்வினை இருந்தால், ஆன்டிபாடி உருவாகி *4 வாரங்களுக்குப் பிறகுதான் அவருக்கு மயக்க மருந்து கொடுக்க முடியும். ஒரு மருந்தகத்தின் நண்பர் உறவினர் இரண்டு நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போடப்பட்டார். அவர் நேற்று பல் மருத்துவரிடம் சென்று உள்ளூர் மயக்க மருந்து பெற்ற உடனேயே இறந்தார். தடுப்பூசி பெட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய எச்சரிக்கையைப் படித்த பிறகு, கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்ட பிறகு, மயக்க மருந்து 4 வாரம் எடுக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை இருப்பதைக் கண்டுபிடித்தோம். உங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரையும் பாதுகாக்க இந்த தகவலை பரப்புங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மருத்துவ காரணங்களுக்காக மயக்க மருந்து ஏதும் செலுத்தக்கூடாது என எச்சரிக்கை செய்யும் ஒரு செய்தி வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பரவி கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி கூறுமாறு வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ?

இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் பிரவீன், ” இது தவறான தகவல். கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற எந்த தடுப்பூசி தயாரிப்பாளர்களும் தங்களுடைய தடுப்பூசி குறித்தான விவர அறிக்கைகளிலும், தடுப்பூசி பற்றிய அறிவியல் ஆய்வுகளிலும் மருத்துவ மயக்க மருந்து குறித்தான முரண்பாடுகள் பற்றி குறிப்பிடவே இல்லை ” எனத் தெரிவித்தார்.

ஐ.சி.எம்.ஆரின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, இந்த செய்தியை அறிவியல் ஆதாரம் அற்ற போலி செய்தி என முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, அதன் பயனான நோய் எதிர்ப்புச் சக்தியை முழுமையாக பெறவே , ‘immuno – suppressive drugs’ எனப்படும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குன்ற வைக்கும் எந்த ஒரு மருந்தை தடுப்பூசி போட்டுக்கொண்ட உடனே எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதுவும் அந்த தடுப்பூசியின் முழு பயனை பெறுவதற்காக மட்டுமே. ஆனால் எந்தவொரு மயக்க மருந்தின் தாக்கமும் குறுகியக் காலமே நிலைக்கக்கூடியது. எனவே உடலை பாதிக்காது ” என இந்திய டுடே செய்திக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஆங்கிலம், தமிழ் உட்பட பல மொழிகளில் பரப்பப்பட்ட இந்த போலி செய்தி, மலேசியாவிலும் தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை பற்றி மலேசியாவின் மயக்க மருந்து நிபுணர் சங்கம் செய்தி அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் டாக்டர் மர்சிடா மன்சர் மற்றும் மலேசியாவின் அகாடமி ஆஃப் மெடிசின் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஜாஹிசா ஹாசன் கூட்டாக வெளியிட்ட அந்த அறிக்கையில், ” நோயாளிகளுக்கு சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்டால், அவசரகால அவசியம் அல்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க பரிசீலிக்கலாம் என நாங்கள் நோயாளிகளுக்கு கூறுவதன் காரணம் மயக்க மருந்து உடனான தொடர்புகள் அல்ல. தடுப்பூசியால் பெறப்படும் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கே. அறுவை சிகிச்சை அவசியம் நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்கு தடுப்பூசி தடையாக இருக்கக் கூடாது ” என தெரிவித்துள்ளனர்.

Advertisement

 

மேலும், இந்திய செய்தி தொடர்பு நிறுவனமான PIB, “இந்த செய்தியை உறுதிப்படுத்த எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இன்றுவரை இல்லை. இந்த செய்தி போலியானது, வதந்திகளை நம்பாதீர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.” என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.

முடிவு :

நம் தேடலில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 4 வாரங்களுக்கு மயக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது மற்றும் பல் மருத்துவரிடம் சென்று உள்ளூர் மயக்க மருந்து பெற்ற நபர் உடனடியாக இறந்து விட்டதாக பரவும் ஃபார்வர்டு தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button