This article is from Nov 23, 2021

கோவிட் தடுப்பூசியால் 24 லட்சம் பேர் பாதிப்பு எனப் பரவும் VigiAccess தரவின் உண்மைத்தன்மை என்ன ?

பரவிய செய்தி

மருத்துவ தயாரிப்புகளின் சாத்தியமான பக்கவிளைவுகளின் WHO உலகளாவிய தரவுத்தளமான விஜிபேஸில் உள்ள தகவல்களைப் பொது அணுகலை வழங்குவதற்காக VigiAccess ஆனது 2015 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் (WHO) தொடங்கப்பட்டது. 2020-2021-ல் கோவிட்-19 தடுப்பூசியால் 24,57,386 பேர் பாதகமான மருந்து எதிர்வினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எனினும், தடுப்பூசிக்கு எதிரான குரல்களும் உலக நாடுகள் பலவற்றில் எழுந்து கொண்டே தான் இருக்கின்றது.

இதற்கிடையில், பல்வேறு நோய்களுக்காக பயன்படுத்தப்படும் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளால் பக்க விளைவு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் VigiAccess தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரே ஆண்டில் 24 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் காரணமாக பக்க விளைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஓர் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

மற்ற தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை காட்டிலும் கொரோனா தடுப்பூசியின் ADR எண்ணிக்கை (பாதகமான மருந்து எதிர்வினைகள்) அதிகமாக இருப்பதால் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த தகவல் பரவி வருகிறது.

உண்மை என்ன ?

பல்வேறு மருந்துகளின் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளின் பதிவுகள் வைக்கப்பட்டுள்ள VigiAccess-ஐ 2015-ல் WHO அறிமுகப்படுத்தியது.

VigiAccess முகப்பு பக்கத்தில், ” மருந்துப் பொருட்களின் பயன்பாட்டுடன் தொடர்புடைய சாத்தியமான பக்க விளைவுகளின்(ADRs) வகைகளைப் பற்றி அறிய விரும்பும் நபர்களுக்கு VigiAccess ஒரு ” தொடக்க புள்ளியாகவே ” பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் ” மருந்து தயாரிப்புக்கும், பக்க விளைவுக்கும் இடையே எந்த உறுதிப்படுத்தப்பட்ட இணைப்பையும் பிரதிபலிக்கவில்லை ” என எச்சரிக்கை விளக்கத்தை அளித்து இருக்கிறது. தளத்தில் நுழைவதற்கு முன்பாக, தரவின் வரம்புகளை, விளக்கத்தை புரிந்து கொண்டதை குறிப்பிடும்படி பயனர்களுக்கு கேட்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து, VigiBase மேலாளர் ஹெலினா ஸ்கோல்ட் , ” VigiAccess மூலம் ஒரு மருத்துவப் பொருளின் பாதுகாப்பு குறித்த முடிவுகளை எடுக்க முடியாது. தரவுகள் பரந்த வகைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில், நோயாளியின் சூழலைப் புரிந்துக் கொள்ளத் தேவையான ” முக்கிய விவரங்கள் ” இல்லை. VigiBase-ல் உள்ள அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு எங்களால் அல்லது WHO ஆல் சரிபார்க்கப்படவில்லை. சில நாடுகள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு முன் தாங்களாகவே சரி பார்க்கலாம் ” என யுஎஸ்ஏடுடே இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல், vigibase டேடாபேஸ் செய்தித்தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா ஹோக்பெர்க், ” பாதகமான மருந்து எதிர்வினைகள்(ADRs) பற்றிய அட்டவணைப்படுத்தப்பட்ட தரவு எங்கள் அமைப்பால் உருவாக்கப்படவில்லை.

இந்த புள்ளிவிவரங்கள் கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பற்றவை என்று கூறவில்லை அல்லது வெவ்வேறு மருந்துகளின் ஒப்பீட்டு பாதுகாப்பு பற்றிய எந்த தகவலையும் வழங்கவில்லை.

இது சில அடிப்படைத் தகவல்களைக் காட்டுகிறது. ஆனால், முக்கியமான தகவல்கள் மற்றும் நோயாளியின் சூழல்கள் அதிகம் இல்லை. தடுப்பூசிகள் ஆபத்தானவை என்பதற்கான சான்றாக காட்டும் வகையில் vigiaccess உடைய தரவு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்க விளைவு அறிக்கை உண்மையான பக்க விளைவுக்கு சமமாக இருக்காது ” என AFP தளத்திற்கு பதில் அளித்து இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்பட்ட பாதகமான மருந்து எதிர்வினை எண்ணிக்கை பற்றி VigiAccess தளத்தில் உள்ள தரவுகள் முழுமையாக சரிபார்க்கப்படாதவை மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட பக்க விளைவு தரவு WHO ஆல் உருவாக்கப்பட்டது அல்ல என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader