This article is from Jul 27, 2020

தவறாக பரவும் அக்குளில் வடை தட்டும் மாற்றுத்திறனாளியின் வீடியோ| உண்மை என்ன ?

பரவிய செய்தி

வெளியில் சாப்பிடும் போது கவனமாக இருங்கள். வைரல் வீடியோ !

Facebook link | archive link 1 | Archive 2

மதிப்பீடு

விளக்கம்

டீக்கடை ஒன்றில் ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய அக்குளில் வடையை தட்டி தட்டி சுடும் காட்சியை கொண்ட 28 வினாடிகள் கொண்ட வீடியோ கூர்கா வாய்ஸ் எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இனி வெளியில் சாப்பிடும் பொழுது கவனமாக இருக்குமாறு கூறி பகிரப்பட்ட இவ்வீடியோ 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. டிக் டாக் உள்ளிட்டவையில் பகிரப்பட்ட வீடியோவையே வைரல் வீடியோ என பகிர்ந்து இருக்கிறார்கள் என அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த வீடியோவின் கமெண்ட்களில், மாற்றுத்திறனாளியாக வேலை செய்வதற்கு பாராட்டினாலும், உணவில் சுத்தம் தேவை என்பதால் அவர் இந்த வேலையை செய்வது சரியல்ல என கூறி பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இருப்பினும், இவ்வீடியோ எங்கு, எப்பொழுது எடுக்கப்பட்டது எனத் தேடிப் பார்க்க ஆராய்ந்த பார்த்த போது கமெண்ட்களில் ” இது உண்மையான வீடியோ அல்ல, திரைப்படத்தில் வரும் காட்சி ” ஒரு சிலர் குறிப்பிட்டதை பார்க்க முடிந்தது. அதை அடிப்படையாக வைத்து, ” vadai master use underarm movie scene ” எனும் கீ வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில், 2016-ல் சவுக்கார்பேட்டை எனும் திரைப்படத்தில் பருத்திவீரன் சரவணன், சிங்கம்புலி, பவர் ஸ்டார் உள்ளிட்டோர் நடித்த நகைச்சுவை காட்சியில் வடை தட்டும் பகுதி இடம்பெற்று இருக்கிறது.

இதை வைத்து மீம்ஸ், யூடியூப் வீடியோ என வெளியாகி இருப்பதையும் பார்க்க முடிந்தது. திரைப்படத்தின் நகைச்சுவை காட்சியாக இருந்தாலும் கூட ஒரு மாற்றுத்திறனாளியை இப்படி சித்தரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இது மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளை தவறாக சித்தரிக்காமல் இருக்க வேண்டும். இல்லையேல், அவையே சமூக வலைதளங்களில் தவறான எண்ணம் உருவாக காரணமாகிவிடும்.

முடிவு : 

நம் தேடலில், வெளியில் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறி இந்திய அளவில் வைரல் செய்யப்படும் வீடியோ தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சியில் இருந்து எடுக்கப்பட்டு தவறாக வைரலாகி வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader